சென்னை:திருவல்லிக்கேணி கெனால் தெருவைச் சேர்ந்தவர், செந்தில் குமார். இவர் பாரதி சாலையில் பழைய புத்தகம் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் லோகேஷ். துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
லோகேஷ் படிக்கும் கல்லூரியில் செமஸ்டர் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், கடந்த 24ஆம் தேதி நடைபெற்ற செமஸ்டர் தேர்வில் பிட் அடித்த லோகேஷை கல்லூரி பறக்கும் படையினர் பிடித்ததாகக் கூறப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழக விதிகளின்படி, தேர்வில் முறைகேடு செய்ததாக லோகேஷை அடுத்த 3 ஆண்டுகளுக்கு தேர்வு எழுத அனுமதிக்க முடியாது என தெரிவித்ததாக கூறப்படுகிறது
இதனால் மாணவர் லோகேஷ் அச்சமடைந்ததாகத் தெரிகிறது. மன உளைச்சல் ஏற்பட்ட லோகேஷூக்கு அவரது கல்லூரி நண்பர்கள் ஆறுதல் கூறி, வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் வீட்டிற்கு வந்த லோகேஷ், சோகமாக இருந்ததுடன் கல்லூரியில் நடந்தவற்றை பெற்றோரிடம் தெரிவிக்காமல், ஜூடோ பயிற்சிக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார்.