சென்னை திருவான்மியூரில் அமைந்துள்ள கலாசேத்ரா கல்லூரியில், பேராசிரியர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து கலாசேத்ராவில் நடைபெறும் பாலியல் தொந்தரவு பிரச்னை குறித்து விசாரணை நடத்துமாறு டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதனைத்தொடர்ந்து சமூக வலைதளங்களில் பாலியல் தொந்தரவுக்கு உள்ளானதாக கூறப்பட்ட மாணவி, தன் மீது அவதூறு பரப்பும் வகையில் பதிவிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததால், டிஜிபிக்கு அனுப்பிய நோட்டீஸை தேசிய மகளிர் ஆணையம் திரும்பப் பெற்றது.
இந்நிலையில் நேற்று முன்தினம் ( மார்ச் 29 ) தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்கள் கலாசேத்ரா கல்லூரிக்குச் சென்று மாணவிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்திச் சென்றனர். இந்த நிலையில் பாலியல் தொந்தரவு கொடுக்கும் பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று காலை ( மார்ச் 30 ) திடீரென சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்லூரியின் வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் கல்லூரியின் இயக்குநர், ஆர்டிஓ, காவல் துறையினர் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
இந்த விவகாரம் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து தொடர்ச்சியாக 30 மணி நேரத்திற்கும் மேலாக மாணவிகள் போராடி வந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வரும் இயக்குநர் மற்றும் தலைமைப் பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் மத்திய கலாசார அமைச்சகத்துக்கும் மின்னஞ்சல் மூலமாக மாணவிகள் புகார் அனுப்பினர்.
பின்னர் தமிழ்நாடு மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து கலாசேத்ரா வழக்கை கையில் எடுத்து, விசாரணை நடத்திச் சென்றது. இருந்த போதிலும் இந்த விவகாரம் தொடர்பாக மாணவிகள் தரப்பில் காவல் நிலையத்தில் எழுத்துப் பூர்வமாக புகார் அளிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில், முன்னாள் மாணவி ஒருவர் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையில் கலாசேத்ரா பவுண்டேஷனில் பயின்று, பாதியில் கல்லூரியை விட்டு நின்றதாக முன்னாள் மாணவி புகாரில் தெரிவித்துள்ளார். குறிப்பாக கல்லூரியில் தனக்கு நடந்த கசப்பான சம்பவங்களை வெளியில் கொண்டுவர நினைப்பதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.