சென்னை: திருப்பூர் மாவட்டம் வி.கள்ளிப்பாளையத்தை சேர்ந்த தெய்வ சிகாமணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், 'தங்கள் கிராமத்தில் உள்ள தர்மராஜா திரெளபதி அம்மன் கோயிலில் பல தலைமுறைகளாக, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் பொங்கல், குண்டம் திருவிழா கொண்டாடப்படவதாகவும், இந்த ஆண்டு திருவிழா மே 26 ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.
திருவிழா குறித்து ஆலோசிப்பதற்காக பிப்ரவரி முதல் கிராமத்தின் முக்கிய நபர்களைக் கொண்டு பல்வேறு கூட்டங்கள் நடத்தபட்ட நிலையில், வி.கள்ளிபாளையம் மற்றும் அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த குறிப்பிட்ட சமூகத்தினரை சேர்க்கவில்லை என தெரிவித்துள்ளார். மேலும், இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், அனைத்து சமுதாய மக்களும் கொண்ட குழுவை அமைக்கக் கோரி, ஏப்ரல் 21 ஆம் தேதி மாவட்ட நிர்வாகத்திற்கு அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கோரி உள்ளார்.