சென்னை: ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர் ஃபிரைடுரிச் வின்சென்ட், இவர் இந்தியாவை சுற்றி பார்ப்பதற்காக இலங்கை வழியாக சென்னை விமான நிலையத்திற்கு கடந்த 24 ஆம் தேதி வந்துள்ளார். பின்னர் அன்று நள்ளிரவு 1 மணி அளவில் விமான நிலையத்தில் இருந்து வாடகை காரில் வளசரவாக்கத்துக்குச் சென்று அங்கு விடுதி ஓன்றில் தங்குவதற்காக அறை எடுத்திருந்த ஃபிரைடுரிச் வின்செண்ட் சாப்பிடுவதற்காக ஹோட்டல் அருகில் இறங்கியுள்ளார்.
பின்னர் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு விடுதி அறைக்கு நடந்து சென்றபோது அவரை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி ஃபிரைடுரிச் வின்சென்ட் வைத்திருந்த லேப்டாப் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் அடங்கிய பையை பறித்துச் சென்று விட்டதாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணியிடம் கத்தி முனையில் வழிப்பறி செய்யப்பட்ட சம்பவம் என்பதால் காவல் துறையினர், இந்த விவகாரத்தை மிகவும் சீரியசாகவே பார்த்தனர். இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விட்டு விசாரணையை தீவிரப்படுத்தினர். வழிப்பறி சம்பவம் நடைபெற்றதாக ஜெர்மன் இளைஞர் புகாரில் குறிப்பிட்டிருந்த இடமான வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் பகுதிக்கு காவல் துறையினர் நேரில் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
சம்பவம் நடந்ததாக கூறப்படும் பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமராக்களை காவல் துறையினர் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், ஜெர்மன் இளைஞரிடம் வழிப்பறி செய்ததற்கான எந்த அடையாளங்களும் தென்படவில்லை. அது தொடர்பான ஆதாரங்களும் சிக்கவில்லை. ஜெர்மன் இளைஞர் கையில் பை எதுவும் இல்லாமல் ஹாயாக நடந்து செல்லும் காட்சிகள் சாலையோர கண்காணிப்புக் கேமராவில் பதிவாகி இருந்தது.