சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வட இந்தியர்கள் தாக்கப்படுவதாக போலி வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வந்தன. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து போலி வீடியோக்களை பரப்புபவர்கள் மீதும், வடமாநில தொழிலாளர்கள் தொடர்பாக அவதூறு பரப்பும் வகையில் போலி பிரசாரம் செய்யும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.
இச்சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீசார் பீகார் சென்று போலி வீடியோ வெளியிட்ட அமன் என்பவரை கைது செய்து தமிழகம் அழைத்து வந்தனர். மேலும் சிலர் மீது வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக பீகாரில் இருந்து தமிழகம் வந்த குழு தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்புடன் இருப்பதை உறுதி செய்தது.
மேலும் பல்வேறு மாநில அரசு அதிகாரிகளுடன் இணைந்து தமிழ்நாடு அரசு அதிகாரிகளும் ஆலோசனை நடத்தி வட மாநில தொழிலாளர்களுக்கு தேவையான பாதுகாப்பை வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில், அண்மையில் நடந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், வட மாநில தொழிலாளர்கள் குறித்து அவதூறாக பேசி பிரசாரம் செய்யும் வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வந்தது.