சென்னை:திரைப்பட இயக்குநரும், பெப்சி சங்கத்தின் தலைவருமான ஆர்.கே. செல்வமணியின் வீடு சென்னை சாலிகிராமம் கண்ணம்மாள் தெருவில் அமைந்துள்ளது. வீட்டினுள் நிறுத்தப்பட்டிருந்த இன்னோவா காரை நேற்று முன்தினம் (அக்.28) இரவு அடையாளம் தெரியாத நபர், கல் வீசித் தாக்கியதில் காரின் பின்புறக் கண்ணாடி உடைந்தது.
இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஆர்.கே. செல்வமணியின் கார் ஓட்டுநர் பாலமுருகன், இது குறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், ஆர்.கே. செல்வமணி வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து, அதில் இருந்த காட்சிகளை வைத்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். கார் ஓட்டுநர் பாலமுருகனுக்கும், நெசப்பாக்கம் பகுதியைச்சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராமர் என்பவருக்கும் ஆற்காட்டு சாலையில் வாகனத்திற்கு வழி விடுவது தொடர்பாக, வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறி இருக்கிறது.
இதில் ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுநர் ராமர், காரைப் பின் தொடர்ந்து வந்து, வீட்டில் நிறுத்தப்பட்டிருந்தபோது காரின் கண்ணாடியை கல்லால் தாக்கி விட்டு தப்பிச்சென்றது தெரியவந்தது. சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் ஆட்டோ ஓட்டுநர் ராமரை பிடித்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்த விருகம்பாக்கம் காவல் துறையினர், ராமரை காவல் நிலைய ஜாமீனில் விடுவித்தனர்.
இதையும் படிங்க:வாகனம் நிறுத்துவதில் முன் விரோதம்... தாயின் கண்முன்னே மகன் கடத்தி கொலை...