தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புற்று நோய் பாதித்தவருக்கு எலும்பு மஜ்ஜை மாற்றுப்பதிய சிகிச்சை - சென்னை மருத்துவர்கள் அசத்தல்! - blood cancer

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் 55 வயதான ஆண் நோயாளிக்கு எலும்பு மஜ்ஜை மாற்றுப் பதிய சிகிக்சை அளிக்கப்பட்டு குணமடைந்துள்ளார்.

55 வயதான ஆண் நோயாளிக்கு எலும்பு மஜ்ஜை மாற்றுப் பதிய சிகிக்சை
55 வயதான ஆண் நோயாளிக்கு எலும்பு மஜ்ஜை மாற்றுப் பதிய சிகிக்சை

By

Published : May 17, 2023, 10:35 PM IST

சென்னை:சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் 55 வயதான ஆண் நோயாளிக்கு எலும்பு மஜ்ஜை மாற்றுப்பதிய சிகிக்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் குணமடைந்தார். சென்னையில் உள்ள எம்ஜிஎம் கேன்சர் இன்ஸ்டிடியூட்டில், சாற்றுப்புற்று என்ற புற்றுநோய் பாதிப்பு மீண்டும் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்த நோயாளி அனுமதிக்கப்பட்டார் . அவருக்கு எலும்பு மஜ்ஜை மாற்றுப்பதிய சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர் தற்போது குணமடைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

55 வயதான ஆண் நோயாளிக்கு எலும்பு மஜ்ஜை மாற்றுப் பதிய சிகிக்சை

மேலும் ரத்த – புற்றுநோயியல் (BMT) துறையின் இணை மருத்துவ வல்லுநர் கோபிநாதன் தலைமையிலான சிறப்பு மருத்துவர்கள் குழு இந்நோயாளிக்கு உடலுறுப்பு மாற்று சிகிச்சையை மேற்கொண்டது. மல்ட்டிபிள் மைலோமா என அழைக்கப்படும் சாற்றுப்புற்று பாதிப்பு 55 வயதான ஆண் நாேயாளிக்கு கண்டறியப்பட்டது.

தொற்றை எதிர்த்துப் போராடும் ரத்த செல்களான பிளாஸ்மா செல்களை பாதிக்கும் ஒருவகை இரத்த புற்றுநோய் இது. ஒரு நோயாளிக்கு சாற்றுப்புற்று நோய் இருக்கும்போது அவரது எலும்பு மஜ்ஜையில் இயல்புக்கு மாறாக மிக அதிக எண்ணிக்கையில் பிளாஸ்மா செல்கள் உருவாவதால், இயல்பான ரத்தசெல்கள் உற்பத்தி பாதிக்கப்படுகிறது.

உடலின் இயல்பான இயக்கத்தில் தடங்கல் ஏற்படுத்தும் வகையில் சிறுநீரகங்கள், எலும்புகள் மற்றும் பிற உடலுறுப்புகளை இது பாதிக்கும் என்பதால், இத்தகைய நிலையில் தரப்படும் சிகிச்சையின் முதல் வடிவமாக கீமோதெரபி பயன்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்நோய் மீது சிறப்பான கட்டுப்பாட்டை பெறும் நோக்கத்தோடு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை செய்யப்பட்டது.

இது குறித்து ரத்த – புற்றுநோயியல் துறையின் இணை மருத்துவ வல்லுநர் கோபிநாதன் கூறும்போது, "எலும்பு மஜ்ஜை என்பது முதல்நிலை உயிரணுக்களின் தேக்க அமைவிடமாக செயல்படும் எலும்புகளுக்கு உள்ளே காணப்படும் ஒரு மென்மையான பஞ்சு போன்ற திசுவாகும். ரத்த ஓட்டத்தில் இருக்கும் வெள்ளை ரத்த அணுக்கள், சிவப்பு ரத்த அணுக்கள் மற்றும் குருதித்தட்டுகள் ஆகியவை இந்த முதல்நிலை உயிரணுக்களிலிருந்து தான் உருவாகின்றன.

மைலோமா, சாற்றுப்புற்று, நிணநீர்சுரப்பி புற்றுநோய், தீவிர ரத்தப் புற்று நோய், சிவப்பணு வளர்ச்சியற்ற சோகை, முதன்மை நோயெதிர்ப்பு பற்றாக்குறை, ரத்த அழிவுச்சோகை மற்றும் அரிவாளணு ரத்தசோகை போன்ற ரத்த கோளாறுகளில் குணமளிக்கும் செயல்முறையாக ரத்த புற்றுநோயியல் திகழ்கிறது. இப்பாதிப்பு ஏற்பட்ட நபர்களின் வாழ்நாள் காலஅளவை இது அதிகரிக்கும் திறன் கொண்டது.

நோயாளிக்கு ஸ்டெம்செல் எனப்படும் முதல்நிலை உயிரணு சேகரிப்பிற்கான ஒரு சிறப்பு ஊசி மருந்தை இவருக்கு செலுத்தினோம். ரத்தம் மற்றும் நோயெதிர்ப்பு செல்களை உருவாக்குகின்ற இந்நோயாளியின் முதிர்ச்சியுறா முதல்நிலை உயிரணுக்கள், கீமோதெரபி சிகிச்சைக்கு முன்னதாக சேகரிக்கப்பட்டு பாதுகாப்பாக சேமித்து வைக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து அதிக அளவிலான கீமோதெரபி மருந்து அவருக்கு வழங்கப்பட்டது.

அடுத்த 24 மணி நேரங்களில் அவரது முதிர்ச்சியடையாத முதல்நிலை உயிரணுக்களை அவரது உடலுக்குள் நாங்கள் திரும்பவும் உட்செலுத்தினோம். இந்த முதல்நிலை உயிரணுக்கள் எலும்பு மஜ்ஜைக்கு இடம் மாறும். அதைத்தொடர்ந்து அவரது உடலில் இரத்த செல்களின் மறுஉருவாக்கப் பணியைத் தொடங்கும். தொற்று ஏற்படாதவாறு நோயாளியை பராமரித்து சேவை வழங்கினோம்.

ஸ்டெம் செல் சேகரிப்பு உத்திகளில் மேம்பாடுகள், புதிய ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் மற்றும் ஆதரவு சிகிச்சை முறைகள் ஆகியவை கடந்த காலத்தோடு ஒப்பிடுகையில் ரத்தப் புற்றுநோயியல் செயல்முறையின் வெற்றி விகித அளவை பெரிதும் மேம்படுத்தியிருக்கின்றன என தெரிவித்தார்.

எம்ஜிஎம் கேன்சர் இன்ஸ்டிடியூட்டின் புற்றுநோயியல் சேவைகள் துறையின் இயக்குனர் ராஜா கூறும்போது, ”இந்நோயாளிக்கு கழுத்தெலும்பு முறிவு, சிறுநீரகங்களின் செயல்திறன் குறைவு மற்றும் பல் சொத்தை போன்ற பல சிக்கல்கள் இருந்தன. இவைகள் இன்னும் மோசமாகாமல் தடுப்பதற்கான சிகிச்சையினை அளித்தோம். புற்றுநோய்க்கு எதிரான உயிர்காக்கும் சிகிச்சையில் முதல் நடவடிக்கையாக கீமோதெரபி இருந்தது.

அதைத்தொடர்ந்து கடந்த மாதத்தில் சுயஎலும்பு மஜ்ஜையை செலுத்தும் சிகிச்சை முறை மேற்கொள்ளப்பட்டது. கடந்த காலங்களை விட அதிகளவில் புற்றுநோய் சிகிச்சைக்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனால் சிகிச்சை அளிப்பதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் காப்பீட்டுத் திட்டங்களிலும் இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்க முடியும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:நீட் தேர்வு முடிவு அச்சத்தில் மாணவன் தற்கொலையா..? போலீஸ் விசாரணை

ABOUT THE AUTHOR

...view details