கடலூர் மாவட்டம் சௌந்திர சோழபுரத்தில் பிறந்த புலவர் கலியபெருமாள், மக்கள் மீது கொண்ட அன்பின் காரணமாக ஆயுதமேந்திய போராளியாக மாறினார். மக்கள் நலனுக்காக அரச ஒடுக்குமுறையை எதிர்த்து போராடிய அவர், அந்த மக்களின் துணையுடன் மரணத்தை வென்றார்.
சிவப்பு சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட கலியபெருமாள்:
சிவப்பு சிந்தனைக்காரர் கலியபெருமாள் திராவிட இயக்கத்தின் மீது ஏற்பட்ட ஈர்ப்பால் அதன் இளைஞர் அமைப்பில் இணைந்து செயலாற்றிய கலியபெருமாள், கம்யூனிச சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டார். நக்சல்பாரி இயக்கத்தை தமிழ்நாட்டில் கட்டியெழுப்பியதில் இவரது பங்களிப்பு முக்கியமானது. மக்களை சுரண்டிப் பிழைக்கும் பண்ணையார்களையும் கந்துவட்டிக்காரர்களையும் அழித்தொழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், அரச விரோதியாகிப்போனார்.
ஆங்கிலேயரிடமிருந்து இந்திய அரசு கைகளில்தான் ஆட்சி மாறியதே தவிர நமக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை என தமிழ் தேசியத்தை கட்டியெழுப்ப முயன்ற முன்னோடிகளில் ஒருவரான கலியபெருமாள், இரட்டை குவளை முறை ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு சாதி எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டு மக்களை ஒன்றிணைக்க விரும்பினார். விவசாயிகள் போராட்டம், அராஜக ஆலைகளுக்கு எதிரான போராட்டம் என அவர் வாழ்க்கை போராட்டங்கள் நிறைந்ததாக இருந்தது.
அழித்தொழிப்பு:
மேற்கு வங்க மாநிலம் நக்சல்பாரியில் வசந்ததின் இடிமுழக்கமாய் எழுந்த விவசாயிகள் கிளர்ச்சியின் தாக்கம் தமிழ்நாடு வரை இருந்தது. உரிமைக்காக ஆயுதமேந்திப் போராடும் சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்டிருந்த கலியபெருமாள், நக்சல்பாரி முன்னோடி சாரு மஜும்தார் சந்திப்புக்கு பிறகு தன்னை அழித்தொழிப்பு பணியில் ஈடுபடுத்திக் கொண்டார். பண்ணையார்களை அழித்தொழிக்கும் பணியின்போது, இவரது தளபதியாக மாறிப்போனவர் தோழர் தமிழரசன்.
பண்ணையார்களின் நிலத்தில் அறுவடை போராட்டத்தில் ஈடுபட்டு, நெல் மணிகளை உழைக்கும் மக்களுக்கு பகிர்ந்தளித்தார்.
குண்டுவெடிப்பு, சிறை வாழ்க்கை:
அழித்தொழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் தோழர்கள் தங்கள் உயிருக்கு ஆபத்து இருக்கும் காரணத்தால், பாதுகாப்புக்காக வெடிகுண்டு தயாரிக்க முடிவு செய்தனர். அந்த சமயம் நடத்த பிழையால் குண்டுவெடித்ததில், தனது மூன்று தோழர்களை இழந்து கலியபெருமாள் பலத்த காயமடைந்தார். அப்போது இவர் அரசாங்கம் தேடும் குற்றவாளி என்பதால் தலைமறைவு வாழ்க்கை வாழ நேர்ந்தது. கலியபெருமாளை பிடிப்பதற்காக அவரது மனைவி, குழந்தைகள், உறவினர் என அனைவரையும் காவல்துறை சித்ரவதை செய்தது.
இந்தியாவிலேயே கலியபெருமாள் குடும்பம் அளவுக்கு அரச ஒடுக்குமுறையை சந்தித்த குடும்பம் வேறு இல்லை என உறுதியாக சொல்லலாம். இறுதியாக காவல்துறையிடம் சிக்கிய கலியபெருமாளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. கலியபெருமாளின் தீவிர சித்தாந்த நடவடிக்கைகளில் தொடர்பில்லாத அவரது குடும்ப உறுப்பினர்கள் பலருக்கும் தண்டனை வழங்கப்பட்டது. சிறைக்கு சென்றும் அவரது போராட்டம் ஓயவில்லை. சிறைக்குள் நிலவும் சாதியப்போக்கு, காவலர்களின் ஒடுக்குமுறையை எதிர்த்து போராடிவந்தார்.
சிறையில் கலியபெருமாளை சந்தித்த தமிழ் தேசிய போராளி பிரபாகரன், அவரது தமிழ் தேசிய உணர்வையும், போராட்ட குணத்தையும் வியந்து பாராட்டியிருக்கிறார்.
மன்னிப்பு கடிதம் கொடுக்காதவர்:
அதிகாரவர்க்கத்துக்கு அடிபணிந்து மன்னிப்பு கடிதம் கொடுத்துவிட்டு, சிறை தண்டனையில் இருந்து தப்பிப் பிழைப்பவர்கள் மத்தியில், தனது போராட்டங்களுக்காக சிறை சென்ற கலியபெருமாள் ஒருபோதும் மன்னிப்பு கடிதம் கொடுத்தது கிடையாது. இந்த போராட்ட வாழ்வுக்கு உறுதுணையாக இருந்தார் அவரது துணைவியார் வாலாம்பாள்.
தூக்கு தண்டனை கைதியாக இருந்தபோதும் கருணை மனு அனுப்ப மறுத்தவர் தோழர் கலியப்பெருமாள். ஓர் அடிப்படைச் சமூக மாற்றத்திற்காக போராளியாக உருவெடுத்த என்னால், என் உயிரைக் காக்க கருணை மனு கொடுக்கும் அளவுக்கு தாழ்ந்து போக முடியவில்லை என்றார்.
மக்கள் துணையோடு மரணத்தை வென்றார்:
மக்கள் துணையோடு மரணத்தை வென்றவர் கலியபெருமாளை தூக்கில் போட துடித்த அரசுக்கு அவரது மக்கள் ஆதரவு அச்சுறுத்தலாக இருந்தது. மக்கள் கையெழுத்து இயக்கம் நடத்தி மனு கொடுக்கப்பட்டதன் விளைவாக அவரது தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டது. தமிழ் தேசிய சித்தாந்தம் இனிவரும் தலைமுறையினருக்கும் சென்று சேர கலியபெருமாள் என்ற பெயர் உந்து சக்தியாக இருந்துகொண்டே இருக்கும்.
இதையும் படிங்க:எம்எல்ஏக்களும் குற்றப் பின்னணியும் - கடந்த தேர்தல் ஒரு அலசல்!