சென்னை:சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கஞ்சா நடமாட்டத்தைத் தடுப்பதற்காகச் சென்னை மாநகரக் காவல்துறை ஆணையாளர் உத்தரவின் பேரில் வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளர் சிவபிரசாத் மேற்பார்வையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, வண்ணாரப்பேட்டை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கஞ்சா புழக்கம் குறித்துத் தனிப்படை காவல் துறையினர் சோதனை மேற்கொண்டு வந்தனர்.
தனிப்படைக் காவல் துறையினர் ரோந்து:
இந்நிலையில், நேற்று இரவு வண்ணாரப்பேட்டை வள்ளலார் நகர் பஸ் நிலையம் அருகே தனிப்படைக் காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு சந்தேகப்படும்படி சென்று கொண்டிருந்த நபர் ஒருவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அந்த நபர் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம், நரசிபட்டினம் ,லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த மங்காராஜ்(35) என்பதும், இவர் ஆந்திராவிலிருந்து கஞ்சாவைக் கடத்தி வந்து சென்னையில் சிலருக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
உடனடியாக அவரை சோதனை செய்து அவரிடம் இருந்த 26 கிலோ கஞ்சாவைத் தனிப்படை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும், அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த சரண்ராஜ் என்கிற சரண்குமார்(24), லட்சுமி என்கிற நொண்டிலட்சுமி(60) மற்றும் திருவொற்றியூரைச் சேர்ந்த கவிதா(25) ஆகியோரிடம் அவர் ஏற்கனவே கஞ்சாவை விற்பனைக்காக கொடுத்து இருந்தது தெரியவந்தது.
உடனடியாகக் காசிமேடு மற்றும் திருவொற்றியூர் பகுதியில் தனிப்படைக் காவல் துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது காசிமேட்டைச் சேர்ந்த சரண்ராஜ் வீட்டில் 22 கிலோ கஞ்சாவும், லட்சுமி வீட்டில் 24 கிலோ கஞ்சாவும், கவிதா வீட்டில் 24 கிலோ கஞ்சாவும் இருந்தது தெரியவந்தது. உடனடியாக 2 பெண்கள் உட்பட 3 பேரையும் கைது செய்த தனிப்படை காவல் துறையினர் அவர்களிடம் இருந்த 70 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.