ஐபில் டிக்கெட்டை பிளாக்கில் விற்ற 9 பேர் கைது; 17 டிக்கெட்டுகள் மற்றும் பணம் பறிமுதல்! - ipl tests
சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் டிக்கெட்டை கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்ற 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை: சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றதை ஒட்டி, டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் சட்ட விரோதமாக விற்பனை செய்பவர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.
அதனடிப்படையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கண்காணித்து வந்தனர். திருவல்லிக்கேணி தனிப்படை காவல் போலீசார் நேற்று சேப்பாக்கம், கிரிக்கெட் மைதானம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளான பட்டாபிராம் கேட், வாலாஜா சாலை, பெல்ஸ் ரோடு, வாலாஜா ரோடு சந்திப்பு, விக்டோரியா ஹாஸ்டல் சாலை சந்திப்பு, சேப்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் மற்றும் சில இடங்களில் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
அப்போது கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்த 9 நபர்கள் கைது செய்தனர். ராயபுரம் பகுதியைச் சேர்ந்த முத்துஜா(22), ஆவடியைச் சேர்ந்த அஜீத் (23) திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பரத் (18), ராயப்பேட்டையைச் சேர்ந்த விவேக் (18) ஆஷிஷ் (30), பழைய வண்ணாரப்பேட்டையினைச் சேர்ந்த அபிஷேக்(26), ஐயப்பன்தாங்கல் பகுதியைச் சேர்ந்த திருப்பதி (31), முகிலன்(31), விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த விஷால் ராஜ் (24) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். அவர்களிடம் இருந்து 17 டிக்கெட்டுகள் மற்றும் ரூ.13,350 பணம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: 100 அடி உயரமுள்ள பனைமரத்தில் ஏறி மயங்கிய போதை ஆசாமி - பத்திரமாக மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை!