தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் 9 ஐபிஎஸ் அலுவலர்கள் இடமாற்றம் - 9 IPS OFFICERS TRANSFERRED IN TAMIL NADU

தமிழ்நாட்டில் மொத்தம் ஒன்பது ஐபிஎஸ் அலுவலர்கள் இன்று பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் 9 ஐ.பி.எஸ். அலுவலர்கள் இடமாற்றம்
தமிழ்நாட்டில் 9 ஐ.பி.எஸ். அலுவலர்கள் இடமாற்றம்

By

Published : May 11, 2021, 4:59 PM IST

தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டதைத் தொடர்ந்து தலைமைச் செயலர், சென்னை மாநகராட்சி கமிஷனர், சென்னை காவல் ஆணையர், உளவுத்துறை ஏடிஜிபி, சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து இன்று (மே.10) ஒன்பது ஐ.பி.எஸ் அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

மாற்றம் செய்யப்பட்டுள்ள ஐபிஎஸ் அலுவலர்களின் பெயர்கள், பணியிட பொறுப்புகளைக் கீழே காணலாம்.

1. ஷகில் அக்தர் - சிபிசிஐடி டிஜிபி

2. கந்தசாமி - லஞ்சம் ஒழிப்புத் துறை டிஜிபி

3. ரவி - ஏடிஜிபி அட்மின்

4. ஆசியம்மாள் - உளவுத்துறை டிஐஜி

5. அரவிந்தன் - சி.பி.சி ஐடி எஸ்.பி

6. சரவணன் - ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு எஸ்.பி

7. திருநாவுக்கரசு - சிபிசிஐடி விங்க் 1

8. ஈஸ்வர மூர்த்தி - உள்நாட்டு பாதுகாப்பு உளவுத்துறை ஐஜி

9. சுவாமி நாதன் - சிபிசிஐடி விங்க் 2

இவர்களில் குறிப்பாக டிஜிபி கந்தசாமி, டிஜிபி ஷகில் அக்தர், டிஐஜி ஆசியம்மாள் ஆகியோர் கடந்து வந்த பாதை குறித்து பார்க்கலாம்.

டிஜிபி கந்தசாமி:

திருநெல்வேலியைச் சேர்ந்த கந்தசாமி 1989ஆம் ஆண்டு ஐ.பி.எஸ் அலுவலரானார். இவர் தமிழ், இந்தி, ஆங்கிலம், சமஸ்கிருதம், ஜெர்மன் உள்ளிட்ட ஐந்து மொழிகளை பேசும் புலமை வாய்ந்தவர். காவல் துறையில் கன்னியாகுமரி எஸ்பியாக பணிக்குச் சேர்ந்த கந்தசாமி, கோயம்புத்தூர், தஞ்சாவூர், நீலகிரி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் எஸ்பியாக பணியாற்றி வந்தார். பின்னர் டிஐஜியாக பதவி உயர்வு பெற்ற கந்தசாமி, மதுரை, விழுப்புரம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் தொழில்நுட்பப் பிரிவிலும், காவல் ஆணையராக மதுரையிலும் பணியாற்றினார்.

பின்னர் சிபிஐயில் சென்னை டிஐஜியாகவும், மும்பையில் இணை இயக்குநராகவும் இருந்தார். நாட்டையே உலுக்கிய குஜராத் சொராபூதீன் ஷேக் என்கவுண்டர் வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட அப்போதைய குஜராத் மாநில உள்துறை அமைச்சர் அமித்ஷாவை 2010ஆம் ஆண்டு கைது செய்தபோது சிபிஐ அமைத்த தனிப்படையில் கந்தசாமியும் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து ஏடிஜிபியாக தொழில்நுட்பப் பிரிவிலும், அட்மினாகவும் கந்தசாமி பணியாற்றினார். மேலும் இவர் 1988ஆம் ஆண்டு ஐக்கிய நாடு பதக்கம், மெச்சத்தகுந்த பணிக்கான பிரதமரின் பதக்கம் உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.

டிஜிபி ஷகில் அக்தர்:

1989ஆம் ஆண்டு ஐபிஎஸ் அலுவலரான ஷகில் அக்தர் தர்மபுரியில் பணியைத் தொடங்கினார். பின்னர் சிவகங்கை எஸ்.பியாகவும், லஞ்ச ஒழிப்பு துறை எஸ்.பியாகவும் பணியாற்றினார். தொடர்ந்து சென்னை போக்குவரத்து துணை ஆணையராகவும், இந்திய உள்நாட்டு விவகார அமைச்சருக்கு தனி செயலாளராகவும் பணிபுரிந்த அவர், காஞ்சிபுரம் மாவட்ட டிஐஜி, கூடுதல் ஆணையர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்தார். ஷகில் அக்தர் சிவில் சப்ளை எஸ்பியாக இருந்த போது ரேஷன் அரிசியை தூத்துக்குடி துறைமுகத்திற்கு கடத்திய குற்றவாளிகளைக் கண்டறிந்தது, 2002ஆம் ஆண்டு மதுரை துணை ஆணையராக இருந்தபோது கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த அல் உம்மா தீவிரவாதியான இமாம் அலி உள்பட ஐந்து பேரை பெங்களூரில் வைத்து என்கவுண்டர் செய்தது போன்ற சம்பவங்கள் குறிப்பிடத்தக்கவை. தீவிரவாதிகளின் மிரட்டலால் ஷகில் அக்தருக்கு ஒய் ப்ளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. சிறப்பாக பணிபுரிந்தமைக்காக மூன்று முறை குடியரசுத் தலைவரிடம் ஷகில் அக்தர் விருது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

டிஐஜி ஆசியம்மாள்:

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த டிஐஜி ஆசியம்மாளை முதன்முறையாக உளவுத்துறை பொறுப்புக்கு அரசு நியமனம் செய்துள்ளது. கடந்த 2004ஆம் ஆண்டு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியின்போது வரதட்சணைக் கொடுமை தடுப்புப் பிரிவு ஒன்று தொடங்கப்பட்டது. அப்போது ஆசியம்மாள் மதுரை டிஎஸ்பியாக பணியில் சேர்ந்தார். பின்னர் மகாபலிபுரம், திருவொற்றியூர் உதவி ஆணையராகவும், தேனி ஏடிஎஸ்பியாகவும் அவர் பணிபுரிந்தார். டிஐஜியாக பதவி உயர்வு பெற்ற பின் காவலர் பயிற்சி பள்ளியிலும், தொழில்நுட்ப பிரிவு டிஐஜியாகவும் ஆசியம்மாள் பணியாற்றினார்.

இதையும் படிங்க: கரோனாவை கட்டுப்படுத்துவது நமது தேசியக் கடமை : சைலேந்திரபாபு ஐபிஎஸ்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details