சென்னை:சட்டப்பேரவைத் தேர்தலின் வெற்றி தோல்வியின் விழுப்புண்கள் இன்னும் ஆறாத நிலையில் அடுத்து ஒரு தேர்தலுக்கு தயாராக வேண்டிய நெருக்கடி கட்சிகளுக்கு உருவாகியுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில், 2016 ஆம் நடத்தப்பட வேண்டிய உள்ளாட்சி தேர்தல், நான்கு ஆண்டுகள் கழித்து 2019ஆம் ஆண்டு டிச., 27 மற்றும் 30ஆம் தேதிகளில், 27 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது.
புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டிருந்ததால் தொகுதிகள் மறுவரையறை போன்ற காரணங்களால், திருநெல்வேலி, தென்காசி, செங்கல்பட்டு காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தப்பட வில்லை.
கடந்த ஆண்டு முழுவதும் அச்சுறுத்தி வந்த கரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருந்தது.
இந்த ஆண்டும் இரண்டாம் அலை தீவிரமாக அச்சுறுத்திவந்த நிலையில் தற்போது தொற்றுப்பரவல் குறைந்து, பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மூன்று மாதம் அவகாசம்
இதற்கிடையில், உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருக்கும் 9 மாவட்டங்களுக்கும், வரும் செப்.,15ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது உள்ள நிலையில், தேர்தல் நடத்தும் காலத்தை 3 மாதங்கள் நீட்டிக்க தமிழ்நாடு அரசு கோரிய நிலையில், அனுமதி வழங்க நீதிமன்றம் மறுத்து விட்டது.
இதனால் செப்டம்பர் மாதத்திற்குள்ள தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது.