கரோனா ஊரடங்கால் கடந்த ஐந்து மாதங்களாக வெளிநாடுகளில் சிக்கித்தவித்துக் கொண்டிருக்கும் இந்தியா்கள், சிறப்பு மீட்பு விமானங்களில் இந்தியாவிற்கு அழைத்து வரப்படுகின்றனா்.
அமெரிக்கா உள்ளிட்ட 5 நாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்கள் மீட்பு
சென்னை :அமெரிக்கா, குவைத், மலேசியா, சிங்கப்பூா், கத்தாா் ஆகிய நாடுகளில் சிக்கித் தவித்த 861 இந்தியா்கள் மீட்கப்பட்டு சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.
அந்த வகையில், அமெரிக்காவிலிருந்து 55 பேர், கத்தாரிலிருந்து 137 பேர், மலேசியாவிலிருந்து 173 பேர், குவைத்திலிருந்து 329 பேர், சிங்கப்பூரிலிருந்து 167 பேர் என மொத்தமாக 861 இந்தியா்கள் மீட்கப்பட்டு ஆறு சிறப்பு மீட்பு விமானங்களில் இன்று (ஆக. 27) காலை சென்னை அழைத்து வரப்பட்டனா்.
இவா்கள் அனைவருக்கும், சென்னை விமானநிலையத்தில் கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, அனைவரும் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட உள்ளனர். அவர்களில், அரசின் இலவச தங்குமிடங்களுக்கு 378 பேரும், கட்டணம் செலுத்தி தங்குமிடங்களான ஹோட்டல்களுக்கு 470 பேரும், அரசின் சிறப்பு அனுமதி பெற்று வீடுகளில் தனிமைப்படுத்தப்பட 13 பேரும் அனுப்பப்பட்டுள்ளனர்.