சென்னை: சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியில் எஸ்பிஐ வங்கிக் கிளையில், கடந்த 2019ஆம் ஆண்டு விஷ்ணுகுமார் என்பவர் வீட்டு கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளார். விஷ்ணுகுமார், தான் fore cross என்ற தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாகவும், மாதம் சுமார் ஒரு லட்சம் ரூபாய் சம்பாதிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஃபோர் கிராஸ் தனியார் நிறுவனத்தின் உரிமையாளர்கள் ஐஸ்வர்யா மற்றும் கோபாலகிருஷ்ணனிடம் சான்றிதழ் வாங்கியுள்ளார். அதில், தங்கள் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் விஷ்ணுகுமார் கோயம்பேடு காம்ப்ளக்ஸில் வீடு வாங்க உள்ளதாகவும், பில்டர் சந்தோஷ் என்பவரிடம் இருந்து 82 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு வீடு வாங்க உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த சான்றிதழில், விஷ்ணுகுமார் தங்கள் நிறுவனத்தில் மாதம் ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் சம்பளம் வாங்குவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த சான்றிதழை சரிபார்த்த வங்கி அலுவலர்கள் விஷ்ணுகுமாருக்கு 82 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை கடனாக வழங்கி உள்ளனர். கடன் தொகையை பில்டர் சந்தோஷ்குமாரிடம் ஒப்படைத்தனர்.
வீட்டுக் கடன் பெற்ற விஷ்ணுகுமார் மாதந்தோறும் கடன் தவணையை கட்டாமல் தலைமாறைவாகிவிட்டதாக தெரிகிறது. இதையடுத்து, அவரைத் தேடி, அவர் கொடுத்த முகவரிக்கு சென்ற வங்கி அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அவர் சான்றிதழில் கொடுத்த முகவரியில் அப்படி ஒரு நிறுவனமும் இல்லை, விஷ்ணுகுமார் என்ற ஊழியரும் அங்கு இல்லை. அதேபோல் பில்டர் சந்தோஷ் குமார் என்று குறிப்பிடப்பட்டவர் பில்டரே இல்லை என தெரியவந்தது.