தமிழ்நாட்டில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசிகளை செலுத்த அரசு முடிவு செய்தது.
இந்நிலையில் மத்திய அரசிடமிருந்து தேவையான தடுப்பூசிகள் முழுமையாக வரவில்லை என்றும்; தமிழ்நாட்டிற்கு கூடுதல் தடுப்பூசிகளை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு, மாநில அரசு கோரிக்கை விடுத்தது.
இல்லையென்றால் தமிழ்நாடு அரசே நேரடியாக தடுப்பூசிகளை வாங்கவும் முடிவு செய்துள்ளது. இதனால் தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசும்; தமிழ்நாட்டிற்குத் தடுப்பூசிகளை அனுப்ப முடிவு செய்தது.
இதனால், தமிழ்நாட்டிற்கு இதுவரை 83 லட்சத்து 39 ஆயிரம் கோவிஷில்டு தடுப்பூசிகளும், 13 லட்சத்து 40 ஆயிரம் கோவேக்ஸின் தடுப்பூசிகளும் வந்துள்ளன. இதுவரை தமிழ்நாட்டில் சுமார் 74 லட்சம் பேர்களுக்குத் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஹைதராபாத்திலிருந்து 82 ஆயிரம் கோவேக்ஸின் தடுப்பூசிகள் விமானம் மூலம் சென்னை வந்தது. 16 பார்சல்களில் வந்த தடுப்பூசிகளில் 10 பார்சல்கள் 51 ஆயிரம் தடுப்பூசிகள், பெரியமேட்டில் உள்ள மத்திய சேமிப்பு கிடங்கிற்கும், 31 ஆயிரம் தடுப்பூசிகள் தேனாம்பேட்டை மாநில அரசின் கிடங்கிற்கும் சுகாதாரத்துறை அலுவலர்கள் எடுத்துச் சென்றனர்.
இதையடுத்து, அங்கிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குப் பிரித்து அனுப்பப்படும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.