சென்னை: ஒரு வாரத்தில் மது போதையில் வாகனம் ஓட்டியதாக 808 வழக்குகள் பதிவு! - drunken driving case in chennai
மதுபோதையில் வாகனம் ஓட்டிய காரணத்திற்காக, சுமார் 803 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல் துறையினர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மது போதை
By
Published : Jul 14, 2021, 5:15 PM IST
சென்னை:குற்றச் செயல்களைக் குறைக்கும் நோக்கில் சென்னை காவல் துறையினர் இரவு பகலாக வாகன சோதனை நடத்தி ரவுடிகள், பழைய குற்றவாளிகள், பிடி ஆணை ரவுடிகளை மடக்கிப் பிடித்து கைது செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
சாலை விதிமீறலுக்கு முற்றுப்புள்ளி
மேலும், ஜீரோ வயலேஷன், ஸ்டாப் லைன் வயலேஷன், ஹெல்மெட் இல்லை என்றால் பெட்ரோல் இல்லை, சாலைகளை தத்தெடுப்பது உள்பட பல திட்டங்களை அறிமுகப்படுத்தி போக்குவரத்து விதிமீறலை தடுக்க முயன்று வருகின்றனர்.
சாலை விதிகளை மீறுவதே பெரும்பாலும் விபத்துகளுக்கு வழிவகுக்கும் நிலையில், அதனைத் தடுப்பதற்காக நவீன ஏஎன்பிஆர் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணித்து, தானியங்கி முறையில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதத் தொகை செலான் அனுப்பப்பட்டும் வருகிறது.
உயிரிழப்புகள் குறைப்பு
இதுபோன்ற சென்னை காவல் துறையின் பல்வேறு கட்ட நடவடிக்கைகளாலும், விழிப்புணர்வாலும் சென்னையில் கடந்த ஆண்டு சாலை விபத்துகளில் 35 விழுக்காடு மரணங்கள் குறைந்துள்ளதாக சென்னை காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல், மே ஆகிய இரண்டு மாதங்களில் 136 மரணங்கள் மட்டுமே நிகழ்ந்துள்ளதாகவும், 626 பேர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்ததாகவும் சென்னை போக்குவரத்து காவல் துறை புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
உயிரைக் குடிக்கும் போதை
அதிகப்படியான விபத்துகள் நடப்பதற்கான காரணம், வாகன ஓட்டிகள் மது போதையில் வாகனத்தை இயக்குவதே எனத் தெரியவந்துள்ளது. அதைத் தடுப்பதற்கான முயற்சியில் தீவிரமாக போக்குவரத்து காவல் துறை ஈடுபட்டு வருகிறது.
மேலும், கரோனா ஊரடங்கு தளர்வுகளால் சென்னையில் வாகனப் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிவிட்டது. டாஸ்மாக் கடைகளும் திறக்கப்பட்டுள்ளதால், மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.
தீவிர வாகனத் தணிக்கை
சென்னை போக்குவரத்து காவல் துறை தீவிரமாக நடத்திய வாகனத் தணிக்கையில், இந்த மாதம் 1ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை மட்டுமே குடித்துவிட்டு வாகனத்தை இயக்கியதாக 808 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தேதி
வழக்குகள் எண்ணிக்கை
(காவல்துறை தகவல் அடிப்படையில்)
ஜூலை 1
61
ஜூலை 2
78
ஜூலை 3
132
ஜூலை 4
168
ஜூலை 5
122
ஜூலை 6
111
ஜூலை 7
136
கரோனா பரவல் காரணமாக மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்கிய நபர்களைக் கண்டறிவதற்காக பயன்படுத்தப்படும் கருவியை பயன்படுத்த முடியாத நிலை இருந்தது.
தற்போது கரோனா பரவல் குறைந்து காணப்படுவதால் மீண்டும் அந்தக் கருவியை பயன்படுத்தி போதையில் வாகனத்தை இயக்கி வரும் வாகன ஓட்டிகளை கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருவதாக சென்னை போக்குவரத்து காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.