சென்னை :தாம்பரம் பகுதியை சேர்ந்தவர்கள் அந்தோணியம்மாள் (41), கற்பகம் (35). கற்பகத்தின் தங்கை அனிதா (29). அந்தோணியம்மாள் மற்றும் கற்பகம் ஆகிய இருவரும் அவர்களது கணவர்களை பிரிந்து தனியாக வசித்து வருகின்றனர். இதில் கற்பகத்தின் தங்கை அனிதாவிற்கு குடும்ப பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மேற்கு தாம்பரம் பகுதியை சேர்ந்த பாத்திமா (40). பாத்திமாவின் தம்பி அபு ஹசன் (35), தங்கை ரஹமது பீவி நிஷா (29), அபு ஹசனின் நண்பர் ராஜேந்திரன் (41) ஆகியோர் அந்தோணியம்மாள், கற்பகம், அனிதா ஆகியோருக்கு யாரோ பில்லி சூனியம் வைத்திருப்பதாகவும், அதனால்தான் கணவர்கள் பிரிந்து வாழ்கின்றார்கள், குடும்பத்தில் பிரச்னைகள் ஏற்படுகின்றது எனவும் கூறியுள்ளனர்.
80 லட்சம் ரூபாய் மோசடி
சூனியத்தை மந்திரம் செய்து எடுத்துவிட்டால் மீண்டும் கணவர்கள் ஒன்று சேர்ந்து விடுவார்கள். குடும்ப பிரச்னைகள் தீர்ந்துவிடும் என ஆசை வார்த்தைகள் கூறி அந்தோனி அம்மாளிடம் 30 லட்சம் ரூபாய், கற்பகத் இடம் ரூபாய் 30 லட்சம், அனிதாவிடம் ரூபாய் 20 லட்சம் என மொத்தம் 80 லட்சம் ரூபாய் ஏமாற்றி பெற்றுள்ளனர்.
இந்தப் பணத்தில் இரும்புலியூர், சந்திரன் நகர், பாத்திமா தெருவில் இடம் வாங்கி சொகுசு பங்களா ஒன்று கட்டி அதில் தற்போது பாத்திமா குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், பாத்திமா மற்றும் அவரது கூட்டாளிகள் ஏமாற்றி பணம் பறித்தது குறித்து தெரியவந்த அந்தோணியம்மாள், கற்பகம், அனிதா மூவரும் சம்பவம் குறித்து தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், நான்கு பேரையும் கைது செய்து தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க : மாசடையும் காவிரி ஆறு - கண்டுகொள்ளாத அலுவலர்கள்