தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டிற்கு முதல்கட்டமாக 8 லட்சம் கரோனா தடுப்பூசிகள் - கோவாசின், கோவிஷீல்டு

கரோனா தடுப்பூசி
கரோனா தடுப்பூசி

By

Published : Jan 11, 2021, 3:46 PM IST

Updated : Jan 11, 2021, 5:02 PM IST

15:40 January 11

சென்னை: தமிழ்நாட்டிற்கு முதல்கட்டமாக 8 லட்சம் கரோனா தடுப்பூசிகள் இந்த வாரத்திற்குள் வர உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரசின் தாக்கம் கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் இந்தியாவில் அதிவேகமாகப் பரவியது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும்  ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 

கரோனா தொற்றுப் பரவல் குறைந்ததால் தற்போது ஊரடங்கில் படிப்படியாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவருகின்றன.

இதற்கிடையே, கரோனா தடுப்பூசியைத் தயாரிக்கும் பணியில் பல்வேறு நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டுவந்தன. இந்நிலையில், அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா போன்ற நாடுகளில் பொதுமக்களுக்குத் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.  

இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அவசரகாலப் பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும்,  நாடு முழுவதும் ஜனவரி 16ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து, தடுப்பூசியைப் போடுவதற்கான பணிகளை மத்திய, மாநில அரசுகள் தொடங்கியுள்ளன. தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் தடுப்பூசிக்கான ஒத்திகைகள் இரண்டு முறை நடத்தப்பட்டது. 

விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் தடுப்பூசிகளைச் சேமித்துவைப்பதற்காக குளிரூட்டப்பட்ட கிடங்குகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன.சென்னையில் உள்ள மத்திய அரசின் மருந்துக் கிடங்கில் 2 கோடி தடுப்பூசிகள் சேமித்துவைப்பதற்கான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.  

இதற்காக ஏற்கனவே தடுப்பூசியைச் செலுத்துவதற்கான ஒருமுறை பயன்படுத்தப்படும் 5 மில்லி சிரிஞ்ச் ஆந்திராவிற்கு 22 லட்சம், தெலங்கானாவிற்கு 22 லட்சம், கேரளாவிற்கு 14 லட்சம், கர்நாடகாவிற்கு 14 லட்சம், தமிழ்நாட்டிற்கு 35 லட்சம் அளிக்க உள்ளதில் 17 லட்சம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில், சீரம் நிறுவனத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு 8 லட்சம் தடுப்பூசிகள் உள்பட தென்னிந்தியாவிற்கான தடுப்பூசிகள் இந்த வாரத்தில் விமானம் மூலம் அனுப்பிவைக்கப்படவுள்ளது. 

முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்தத் தடுப்பூசி முதல்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் 3 கோடி பேருக்கு போடப்படும் என்றும் அதன்பிறகு 50 வயதுக்கு மேற்பட்டோருக்குச் செலுத்தப்படும் என்றும் முன்னதாக மத்திய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.   

இதையும் படிங்க:ஜனவரி 16 முதல் கரோனா தடுப்பூசி: மோடி முதலமைச்சர்களுடன் ஆலோசனை

Last Updated : Jan 11, 2021, 5:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details