சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு கடுமையான முயற்சிகளை எடுத்துவருகிறது. கட்டுப்பாட்டு பகுதிகளைத் தவிர்த்து, வேறு இடங்களுக்குப் புதிதாக, கரோனா வைரஸ் தொற்று பரவ விடாமல் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் மட்டும் 77 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 5 பேர் வெளிநாடுகளில் இருந்துத் திரும்பிவந்துள்ளனர். இந்த ஐந்து பேருடன் தொடர்பில் இருந்த 72 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 911 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிப்புக்குள்ளானவர்கள் பற்றிய முழுமையாக தகவல்கள் ஒரு சில நாள்களில் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களுக்கும் சிகிச்சை வழங்கப்படும்.
இதுவரை தமிழ்நாட்டில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 23 பேருக்கு எவ்வாறு வைரஸ் பரவியது என்பது தொடர்பாக தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. அதுகுறித்து தொடர்ந்து கண்டறிந்துவருகிறோம். ஊரடங்கு உத்தரவு காரணமாக, பாதிக்கப்படும் மக்களுக்கு ரேசன் பொருள்கள், பணம் ஆகியவை 90 விழுக்காடு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
வறுமையில் வாடும் தொழிலாளர்களுக்கும் ரூ.1000 வழங்குவதற்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இந்த நிதியுதவி தமிழ்நாட்டில் உள்ள 8 லட்சத்து 50 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தையில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வீடு தேடி காய்கனி விற்பனை செய்ய, சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. வயதானவர்களுக்கு வீட்டிற்கே சென்று உணவு வழங்கும் நடைமுறை விரைவில் கொண்டுவரப்படும்.
ஊரடங்கை நீட்டிப்பதா? என்பது குறித்து, தமிழ்நாடு அரசு அறிவித்த 12 குழுக்கள், மருத்துவர்களிடம் கருத்துகளை கேட்டறிந்துள்ளது. தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்படும் போதுதான் ஊரடங்கு உத்தரவு விலக்கிக் கொள்ளப்படும்.
பேரிடர் கால நிதியாக, மத்திய அரசு அறிவித்த 15,000 கோடியில் 314 கோடி ரூபாய் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு நிதி வந்துள்ளது. தூத்துக்குடியில் உயிரிழந்த 71 வயது பெண்ணையும், சேர்த்து தமிழகத்தில் பலியானோரின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்பில் 2ஆம் கட்டத்தில், தற்போது தமிழகம் உள்ளது. அது 3ஆம் கட்டத்திற்குச் செல்வதைத் தடுக்க அனைத்து துறைகளும் இணைந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.
கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, 28 நாள்கள் சிகிச்சைக்குப் பிறகு, இன்று ஒரே நாளில் 44 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர்" என்றார்
இதையும் படிங்க...ஊரடங்கை நீட்டிக்க மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரை!