பட்டா வாங்கித் தருவதாக ஏமாற்றிய போலி அரசு அதிகாரி சென்னை:புழல் பகுதியைச் சேர்ந்தவர் வனஜா (71) என்ற மூதாட்டி, அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், புழல் பகுதியில் தனக்கு சொந்தமாக 22 சென்ட் நிலம் இருப்பதாகவும், அதற்குப் பட்டா பெறுவதற்காகக் கடந்த 2021 ஆம் ஆண்டு மாதவரம் வட்டாட்சியர் அலுவலகத்தை அணுகியதாகவும் தெரிவித்துள்ளார்.
அப்போது தனது மகன் நண்பர் மூலம் இளையராஜா என்பவர் அறிமுகமாகித் தான் அரசு உயர் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் நெருக்கமான நண்பர் எனவே ஒரு வாரத்திற்குள் உங்களுக்குப் பட்டா வாங்கித் தருகிறேன் என ஆசை வார்த்தை காட்டியதாகவும் தெரிவித்துள்ளார். 5 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் உடனடியாக பட்டா வாங்கித் தருவதாகவும் இளையராஜா தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் பணம் கொடுக்க விருப்பமில்லை கூறியும் இளையராஜா தொடர்ந்து தொந்தரவு செய்ததால், கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இளையராஜாவிடம் மூன்று லட்ச ரூபாய் பணத்தைக் கொடுத்து பட்டா வாங்கித் தரக் கூறியதாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக அண்ணா நகரில் சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் உணவு விடுதியில் மகனோடு சென்று பிளாஸ்டிக் பையில் மூன்று லட்ச ரூபாய் பணத்தைக் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் நீண்ட நாட்களாகியும் பட்டா வாங்கித் தராமல் இளையராஜா தங்களை ஏமாற்றியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதன் பின்பு விசாரணை செய்த போது தான் இளையராஜா அரசு அதிகாரி இல்லை எனவும் காங்கிரஸ் கட்சியில் பிரமுகராக இருப்பதாகத் தெரிய வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். பணத்தைத் திரும்பக் கேட்கும் பொழுது மிரட்டும் தொனியில் பேசியதாகக் குற்றம் சாட்டியுள்ளார். தனக்கு அனைத்து இடங்களிலும் ஆள் இருப்பதால் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என இளையராஜா மிரட்டியதாகப் புகாரில் தெரிவித்திருந்தார்.
அண்ணாநகரில் இந்த புகார் கொடுக்கப்பட்டு ரசீதும் பெறப்பட்டுள்ளது. குறிப்பாக இளையராஜா தனியார் உணவு விடுதியில் பணம் வாங்கும் வீடியோ காட்சி மற்றும் மிரட்டும் ஆடியோ உள்ளிட்டவற்றை ஆதாரமாகக் கொடுத்து புகார் அளித்தது தெரிய வந்துள்ளது.
இருப்பினும் ஆறு முறை அண்ணா நகர் காவல் நிலையத்திற்குச் சென்றும் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை வேதனை தெரிவித்துள்ளார். காவல் நிலையங்களில் பெண்கள் புகார் அளிக்க வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் தெரிவித்தும், புகாரில் ஆதாரங்கள் இல்லை எனக் கூறி நீதிமன்றத்தை நாடுமாறு வயதான தன்னை அலைக் கழிப்பதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த புகார் தொடர்பாகச் சென்னை அண்ணாநகர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ஜெயச்சந்திரனிடம் கேட்டபோது, "வனஜா கொடுத்த புகாரில் உரிய ஆதாரங்கள் இல்லாததால் விசாரணை நடைபெற்று வருவதாகவும், இதுபோன்று ஆதாரங்கள் இல்லாமல் பணத்தைக் கொடுத்து ஏமாற வேண்டாம்" எனவும் பொதுமக்களுக்கு அறிவுரை கூறும் வகையில் தெரிவித்தார்.
உரிய வீடியோ, ஆடியோ ஆதாரங்கள் கொடுக்கப்படும் சிசிடிவி ஆதாரங்கள் இல்லை எனவும் எதிர்த் தரப்பில் பணம் வாங்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டதாகவும் இருப்பினும் திருப்பி விசாரணைக்கு அழைத்துள்ளதாகவும் காவல் ஆய்வாளர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த இரு தினங்களில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் காவல் நிலையங்களுக்குப் பெண்கள் புகார் அளிக்க வரும்போது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனத் தமிழக காவல் துறைக்கு அறிவுரை வழங்கியிருந்தார். இவ்வாறு கூறிய அடுத்த நாளே மூதாட்டி ஒருவர் காவல் நிலையத்தில் ஆறு முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறி வேதனை தெரிவித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:குழந்தை பெறுவதற்காக அஸ்தியை சாப்பிடச்சொல்லி வற்புறுத்தல் - புனேவில் அதிர்ச்சி சம்பவம்!