சென்னை:12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 50,000 மாணவர்கள் தேர்வு எழுதாதது குறித்து தமிழக சட்டப்பேரவையில் இன்று(மார்ச்.24) சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது, அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், பா.ம.க சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே. மணி உள்ளிட்டோர் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், "கரோனா பெருந்தொற்றுக்கு பின்னர் மாணவர்களிடையே பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த ஆண்டு பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து ஜூலை மாதத்தில் துணைத்தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வரும் கல்வி ஆண்டு முதல் 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் குறைந்தது 75 சதவீத வருகைப் பதிவு இருந்தால் மட்டுமே பொதுத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களைக் கண்டறிந்து துணைத் தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்படும்.
பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்கப்படும். மாவட்டம்தோறும் சிறப்புப் பள்ளி மேலாண்மை குழு உருவாக்கப்பட்டு கூட்டம் நடத்தப்படும். ஜூலையில் நடைபெற உள்ள துணைத்தேர்வில் மாணவர்கள் கலந்து கொள்ளும்படி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். அவர்களுக்கான சிறப்புப் பயிற்சி மையங்களும் அமைக்கப்படும்.
ஒரு மாணவர் வாரத்தில் மூன்று நாட்கள் பள்ளிக்கு வரவில்லை என்றால், தலைமை ஆசிரியர் அவர்களை கண்காணிப்பார். இதேபோல இரண்டாவது வாரத்தில் அந்த மாணவர் பள்ளிக்கு வரவில்லை என்றால் வட்டார கல்வி அலுவலர் கண்காணிப்புப் பட்டியலில் இடம் பெறுவார்.
மூன்றாவது வாரத்தில் 9 நாட்கள் அந்த மாணவர் பள்ளிக்கு வரவில்லை என்றால் மாவட்ட ஒழுங்கு கண்காணிப்பு குழு கண்காணிக்கும். நான்காவது வாரத்தில் அந்த மாணவர் தொடர்ந்து வரவில்லை என்றால் இடைநிற்றல் என கணக்கில் கொள்ளப்படும்" என்று கூறினார்.
தமிழ்நாட்டில் கடந்த 13ஆம் தேதி, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில், முதல் நாளிலேயே மொழிப்பாடத் தேர்வில் சுமார் 50,000 மாணவர்கள் ஆப்சென்ட் ஆகினர். மொழிப்பாடத் தேர்வில் பங்கேற்காத மாணவர்களை பிற பாடத் தேர்வுகளில் பங்கேற்க வைக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் முயற்சித்தனர். ஆனால், கடந்த 21ஆம் தேதி நடைபெற்ற இயற்பியல், கணினி அறிவியல், பொருளியல், வணிகவியல் உள்ளிட்ட முக்கியப் பாடங்களிலும் சுமார் 47,000 மாணவர்கள் பங்கேற்கவில்லை என பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்தது.
அதேபோல், 11ஆம் வகுப்பிலும் முதல் நாளிலேயே 12,660 மாணவர்கள் தேர்வுக்கு வரவில்லை. கரோனா பரவலுக்குப் பிறகு மாணவர்களிடம் ஏற்பட்டப் பல்வேறு மாற்றங்களால் மாணவர்கள் தேர்வை புறக்கணித்திருக்கலாம் என உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: பொதுத்தேர்வில் 50,000 மாணவர்கள் ஆப்சென்ட்.. உளவியல் நிபுணர் அபிலாஷா கூறும் பகீர் காரணங்கள்!