சென்னை :விநாயகர் சதுர்த்திக்கு செப்டம்பர் 17 ஆம் தேதி அன்று பொது விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு அறிவித்து இருந்தது. ஆனால், செப்டம்பர் 18 அன்று தான் விநாயகர் சதுர்த்தி என பல்வேறு தரப்பினர் பொது விடுமுறை தினத்தை மாற்றக் கோரி அரசுக்குக் கோரிக்கை விடுத்ததை அடுத்து செப்டம்பர் 18ஆம் தேதியை பொது விடுமுறையாக அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.
இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி தமிழகம் முழுவதும் 74 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளதாக தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்து உள்ளார். அதே போல் காவல் துறையினரிடம் அனுமதி பெற்று பொது இடத்தில் விநாயகர் சிலை வைத்து வழிபடும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும், சென்னை உயர்நீதிமன்றம் சுட்டிக் காட்டிய அறிவுரையின்படி தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என அந்தந்த காவல் மாவட்ட கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆணையர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
விநாயகர் சிலை ஊர்வலம் செல்லும்போது, யாரும் அங்கு நடனம் ஆடவோ, கூச்சலிடவோ கூடாது எனவும், அரசியல் கட்சி, சாதி, மதம், சமூகம் உள்ளிட்டவை குறிப்பிட்டு பிளக்ஸ் பேனர்கள் மற்றும் பாடல்கள் ஒலிக்கவும் கூடாது எனவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்தார்.