சென்னை: இதுகுறித்து நிதி அமைச்சர் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளதாவது, ' 2023-24ஆம் ஆண்டில் மாநில அரசு 1,43,197.93 கோடி ரூபாய் அளவிற்கு மொத்தக் கடன் பெற திட்டமிட்டுள்ளது. மேலும், 51,331.79 கோடி ரூபாய் பொதுக் கடனை அரசு திருப்பிச் செலுத்தும். இதன் விளைவாக, 31.03.2024 அன்று நிலுவையில் உள்ள கடன் 7,26,028.83 கோடி ரூபாயாகும். மாநில மொத்த உற்பத்தி மதிப்பீட்டின் சதவீதத்தில் நிலுவையிலுள்ள மொத்தக் கடன் 2024-25ஆம் ஆண்டில் 25.63 சதவீதமாகவும், 2025-26 ஆம் ஆண்டில்
25.82 சதவீதமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது 15-வது நிதிக்குழு பரிந்துரைத்த இலக்கிற்குள் உள்ளது. இவ்வாறு, நிதி மேலாண்மையின் ஒரு பகுதியாக கடன் திருப்பி செலுத்துவதற்கான திறனை எய்த அரசு திட்டமிட்டுள்ளது. கடன் உத்திரவாதங்கள்
ஒவ்வொரு ஆண்டிலும் நிலுவையிலுள்ள அரசு உத்திரவாதங்கள் முந்தைய ஆண்டின் மொத்த வருவாய்க் கணக்கு வரவுகளில் 100 சதவீத அளவு அல்லது மாநில மொத்த உற்பத்தி மதிப்பீட்டில் 10 சதவீத அளவு, இவற்றில் எது குறைவானதோ அந்த அளவிற்குள் அமையப் பெற வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டிலும் மீளப் பெறும் சாத்தியக் கூறுகளின் அடிப்படையில் (Risk weighted) கணக்கிடப்பட்ட நிலுவையிலுள்ள அரசு உத்திரவாதங்கள் முந்தைய ஆண்டின் மொத்த வருவாய்க் கணக்கு வரவுகளில் 75 சதவீதம் அல்லது மாநில மொத்த உற்பத்தி மதிப்பீட்டில் 7.5 சதவீதம் இவற்றில் எது குறைவானதோ அந்த அளவிற்குள் அமையப் பெற வேண்டும்.
2022ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 31ஆம் தேதி அன்று உள்ளபடி மீளப்பெறும் சாத்தியக் கூறுகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட நிலுவையிலுள்ள அரசு உத்திரவாதங்களின் (Risk weighted guarantees) அளவு, முந்தைய ஆண்டின் மொத்த வருவாய் வரவுகளில் 11.18 சதவீதமாகவும் மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பீட்டில் 1.06 சதவீதமாகவும் உள்ளது.
மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மாநிலத்தின் சொந்த வரி வருவாயின் சதவீதம் குறைந்து
வரும் போக்கை தடுக்க, வரி விகிதங்களை சீரமைத்தல், வசூலிப்புத் திறனை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நிதி திரட்டும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
இதன் விளைவாக, மாநிலத்தின் சொந்த வரி வருவாய், 2022-23ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடான 1,42,799.93 கோடி ரூபாயுடன் ஒப்பிடும்போது திருத்த மதிப்பீடுகளில் 1,51,870.61 கோடி ரூபாயாக உயருமென்று மதிப்பிடப்பட்டுள்ளது. வரும் ஆண்டில், மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 1,81,182.22 கோடி ரூபாயாக மேலும் உயருமென்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது திருத்த மதிப்பீடுகளுடன் ஒப்பிடுகையில் 19.30 சதவீதம் அதிகமாகும்.
வரவு-செலவுத் திட்டத்தில் கணித்தவாறு, மாநிலத்தின் சொந்த வரியல்லாத வருவாய் திருத்த மதிப்பீடுகளிலும் 15,309.40 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. வரும் ஆண்டில், திருத்த மதிப்பீடுகளை விட 32.10 சதவீதமாக உயர்ந்து, 20,223.51 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.