சிறுமியை மாடு முட்டிய சம்பவத்தின் எதிரொலி: 3 நாட்களில் 71 மாடுகள் பறிமுதல்! சென்னை: சூளைமேட்டைச் சேர்ந்தவர் ஹர்சின் பானு. இவர் கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி தனது மகளை பள்ளியிலிருந்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது இவரது மகளான ஆயிஷாவை மாடு கொம்பால் குத்தி தூக்கி வீசியது. பின்னர் கீழே விழுந்த சிறுமியை, மாடு விடாமல் குத்திய நிலையில் அருகில் இருந்தவர்கள் கூச்சலிட்டு கற்களை மாடு மீது வீசி சிறுமியைக் காப்பாற்றினர்.
அதன் பின்னர் அச்சிறுமி அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, ஆணையாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் அந்த சிறுமியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவத்திற்கு அரசியல் பிரமுகர்கள் முதல் சமூக ஆர்வலர்கள் வரை பலரும் தங்களது கண்டனத்தைத் தெரிவித்து இருந்தனர்.
களத்தில் இறங்கிய சென்னை மாநகராட்சி ஆணையர்: இந்த நிலையில், சென்னை மாநகராட்சி அதிகாரிகளின் உத்தரவின் பேரில், சென்னை எம்எம்டிஏ காலனியில் சிறுமியை முட்டிய மாட்டினை, மாநகராட்சி அலுவலர்கள் பறிமுதல் செய்து பெரம்பூரில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான மாட்டு தொழுவத்தில் விட்டுள்ளனர். மேலும், அந்த மாட்டினைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
பெரம்பூரில் ஆய்வு நடத்திய சென்னை ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், அதைத் தொடர்ந்து சென்னை புதுப்பேட்டையில் உள்ள மாட்டு தொழுவத்தையும், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் சம்பவம் நடந்த அன்று முதல் ஆய்வு செய்து வருகிறார். மேலும், சென்னை ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னையில் நெரிசல் மிக்க பகுதிகளிலும், மக்கள் அதிக அளவில் இருக்கும் பகுதிகளிலும் உள்ள மாடுகளை பிடிக்க உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து சென்னை ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், சாலையில் திரியும் மாடுகள் பறிமுதல் செய்யப்படுவதை நேரில் சென்று பார்வையிட்டார்.
3 நாட்களில் 71 மாடுகள்:சென்னை மாநகரில் கடந்த மூன்று நாட்களில் இதுவரை 71 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளது. மேலும், திருவல்லிக்கேணி, வில்லிவாக்கம், கோயம்பேடு, தண்டையார்பேட்டை ஆகிய பகுதிகளில் மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளது என்றும், சாலைகளில் திரியும் மாடுகளை குறித்து தீவிரமாக பெருநகர சென்னை மாநகராட்சி கவனித்து வருகிறது என்றும், மேலும் தாயுடன் இருக்கும் கன்றை பிரிக்காமல் அவை ஒரே இடத்திலும், கர்ப்பமாக இருக்கும் பசுவை மிகுந்த கவனத்துடனும் கையாளுகிறோம் என சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:சென்னையில் சிறுமியை முட்டிய மாடு இதோ... மாட்டுத்தொழுவங்களை திடீர் ஆய்வுசெய்த சென்னை ஆணையர்