சென்னை:தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம் முதுமலை, கோவை மாவட்டம் ஆனைமலை, திருநெல்வேலி மாவட்டம் களக்காடு-முண்டந்துறை, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை என 5 இடங்களில் புலிகள் காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன. வனத்துறை தரவுகளின் அடிப்படையில் தமிழ்நாட்டில் 2014ம் ஆண்டு 229 புலிகள் இருந்த நிலையில், தற்போது இதன் எண்ணிக்கை 264 ஆக உயர்ந்துள்ளது. ஒருபுறம் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும், மறுபுறம் வேட்டையாடப்படும் சம்பவங்களும் நிகழ்கின்றன.
தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் 70 புலிகள் இறந்துள்ள நிலையில், நாட்டிலேயே புலிகள் இறப்பு விகிதத்தில் 6வது இடத்தில் உள்ளதாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் (NTCA) தரவுகள் தெரிவிக்கின்றன. இது வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ள நிலையில், புலிகளை பாதுகாக்க வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் விஜய் கிருஷ்ணராஜ் கூறுகையில், "புலிகள் காப்பகங்களில் உள்ளது போல, தனியார் தோட்டங்களிலும், புலிகள் அதிகம் நடமாடும் இடங்களிலும் வேட்டை தடுப்பு முகாம்களை அமைக்க வேண்டும். இதனை கண்காணிப்பதற்கு திறம்பட செயல்படக்கூடிய வன அதிகாரிகளையும் நியமிக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. புலிகள் காப்பகத்தை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்து காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.