தென்னக ரயில்வே ஊழியர்கள் 70 பேருக்கு கரோனா
சென்னை: தென்னக ரயில்வேயில் பணியாற்றும் 70க்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஊரடங்கு காரணமாக ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டாலும், புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ஷ்ராமிக் சிறப்பு ரயில்களும், குறிப்பிட்ட வழித்தடங்களில் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது.
இதற்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அருகே அமைந்துள்ள தென்னக ரயில்வேயின் தலைமை அலுவலகமான பொது மேலாளரின் அலுவலகம், அதன் பின்புறத்தில் உள்ள சென்னை கேட்ட அலுவலகம் ஆகியவற்றில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை குறைந்த அளவு பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வந்தனர்.
இதையடுத்து அங்கு பணியாற்றிய மூத்த அதிகாரி, ஆர்பிஃஎப் வீரர், அலுவலக பணியாளர்கள் என அங்கு பணியில் இருந்த பலருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கடந்த 28 ஆம் தேதி முதல் இந்த அலுவலகங்கள் மூடப்பட்டன. மேலும், சென்னை ஐசிஎஃப் பணிமணையிலும் ஊழியர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, ஐசிஃஎப் அலுவலகமும் மூடப்பட்டது.
ரயில்வே அலுவலகங்களில் கடந்த வாரம் முதலே ஊழியர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டதாக தெரிகிறது. சென்னை கோட்ட அலுவலகத்தில் 2, 4 மற்றும் 5 ஆவது தளத்தில் கரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதேபோல் பொது மேலாளர் அலுவலகத்தில் பணியாளருக்கும், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் தொடக்கத்தில் ரயில்வே நிர்வாகம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பெரம்பூரில் உள்ள ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 70-க்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு