நிவா் புயல் காரணமாக சென்னை விமான நிலையப் பகுதியில் நேற்று (நவ.23) இரவிலிருந்து விட்டு விட்டு பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், இன்று (நவ.24) பிற்பகல் வரை விமான சேவைகள் பெரிய அளவில் பாதிப்பு இல்லாமல் இருந்தது. ஆனால், 3.30 மணிக்கு மேல் இடைவெளி இல்லாமல் பெய்த கனமழையால், சென்னை விமான நிலைய ஓடுபாதைகள் இரண்டிலும் குளம் போல் தண்ணீா் தேங்கியது.
ஆனாலும், சென்னையிலிருந்து புறப்படும் விமானங்கள் வழக்கம் போல் புறப்பட்டுச் சென்று வருகின்றன. தரையிறங்கும் விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்து வருகின்றன. மழை சிறிது ஓய்ந்து ஒடுபாதையில் தண்ணீா் வடிந்ததும், விமானங்கள் ஒன்றன் பின் ஒன்றாகத் தரையிறங்குகின்றன.
இன்று (நவ.24) 3.15 மணிக்கு ஜோத்பூரிலிருந்து 117 பயணிகளுடன் வந்த விமானம், மாலை நான்கு மணிக்கு 77 பயணிகளுடன் டில்லியிலிருந்து வந்த விமானம், மாலை 4.10 மணிக்கு 134 பயணிகளுடன் ஹைதராபாத்திலிருந்து வந்த விமானம், மாலை 4.15 மணிக்கு 159 பயணிகளுடன் பாட்னாவிலிருந்து வந்த விமானம், மாலை 4.20 மணிக்கு அந்தமானிலிருந்து 148 பேருடன் வந்த விமானம் உள்ளிட்ட ஏழு விமானங்கள் சென்னையில் தரையிரங்க முடியாமல் தவித்தபடி வானில் தொடர்ந்து வட்டமடித்தன.