சென்னை:இன்று (அக்.5) நடைபெற்ற கலந்தாய்வில் 7.5 விழுக்காடு இடஒதுக்கீட்டின் கீழ் 223 அரசு பொறியியல் கல்லூரிகளில் ஒரு கல்லூரி கூட மாணவர்கள் தேர்வு செய்யவில்லை. இதனால் அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படும் சூழல் உள்ளது.
அரசு பள்ளியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கு தொழிற்கல்வி படிப்பில் 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டது. இந்த இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.
82% மாணவர்கள் தனியார் கல்லூரிகளை தேர்வு
இதுவரை நடைபெற்ற கலந்தாய்வில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழ் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்த 5 ஆயிரத்து 920 மாணவர்களில், 82 விழுக்காடு அதாவது 4 ஆயிரத்து 920 மாணவர்கள் தனியார் பொறியியல் கல்லூரிகளையே தேர்வு செய்துள்ளனர்.
7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழ் பொறியியல் கல்லூரிகளில் 11 ஆயிரம் இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதற்கு 9 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில் 5 ஆயிரத்து 920 மாணவர்கள் தற்போது வரை கல்லூரிகளை தேர்வு செய்துள்ளனர்.