சென்னை: கலைவாணர் அரங்கில் இரண்டாம் நாள் சட்டப்பேரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. ஆளுநர் உரையின் மீதான விவாதத்தில் விராலிமலை தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் விஜயபாஸ்கர் பேசினார்.
அப்போது பேசிய அவர், "அதிமுக தமிழ்நாடு அரசுக்கு பல நல்ல திட்டங்களைக் கூறி ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படும். 2019 டிசம்பர் மாதத்தில் என்ன வைரஸ் பரவுகிறது என்று தெரியாத சூழலில் அப்போதைய அதிமுக அரசு மருத்துவத் துறையில் வலுவான ஒரு கட்டமைப்பை உருவாக்கியது.
ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் நாம் இன்னும் கவனமாக இருக்க வேண்டிய தேவை இருக்கிறது. கரோனா மறுவாழ்வு மையங்களை உருவாக்க வேண்டும். மூன்றாவது அலை குறித்து மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர், சுகாதார கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தி அதை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும்.
கரோனா மூன்றாவது அலை குழந்தைகளைத் தாக்கும் எனக் கூறுகின்றனர். எனவே குழந்தைகள் நல மருத்துவமனைகளில் குறைந்தபட்சம் ஒரு லட்சம் படுக்கைகளைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்த ஆறு கோடி பேருக்கு இலக்கு நிர்ணயித்து இதுவரை ஒரு கோடி பேருக்கு மட்டுமே முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இரண்டாவது தவணை எடுத்துக்கொண்டவர்கள் 24 லட்சம் பேர் மட்டுமே, எனவே தடுப்பூசி போடும் திட்டத்தை அரசு துரிதப்படுத்த வேண்டும். தடுப்பூசி போடுவதை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்.
நீட் எதிர்ப்புக் கொள்கையில் அதிமுக அரசு உறுதியாக இருக்கிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில்தான் கடந்தாண்டு நீட் தேர்வு நடைபெற்றது. இந்தாண்டு நீட் தேர்வு தமிழ்நாட்டில் இருக்கிறதா இல்லையா என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
நீட் தேர்வில் வெற்றிபெற்ற அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அதிமுக ஆட்சியில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இந்த இட ஒதுக்கீட்டில் 2.5 விழுக்காடு அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தற்போதைய அரசின் நிலைப்பாடு என்ன" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: நெட்வொர்க் இல்லை... ஆன்லைன் தேர்வெழுத நடந்தே சென்ற பழங்குடியின மாணவி