சட்டப்பேரவையில் சட்டம், நீதி நிர்வாகம், சிறைச்சாலைகள் ஆகிய துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய திமுக உறுப்பினர் சுதர்சனம், எழுவர் விடுதலை தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நீண்ட நாட்களாகிறது எனவும், அது தொடர்பாக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் பேசினார்.
அதற்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எழுவர் விடுதலை தொடர்பாக தீர்மானம் ஆளுநருக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும், ஆளுநர் இனி முடிவெடுப்பார் எனவும் தெரிவித்தார். அதே நேரத்தில், திமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சரவைக் கூட்டத்தில் நளினியை மட்டும் விடுதலை செய்யலாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை கவனத்திற்கு கொண்டு வருவதாகவும் பேசினார். தொடர்ந்து பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன், தமிழக அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்ற வாய்ப்பை நீதிமன்றம் உங்களுக்கு கொடுத்திருப்பதாகவும், எங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை எனவும் கூறினார்.