சென்னை, மீனம்பாக்கத்தை அடுத்த பழவந்தாங்கல் பி.வி நகர் ஒன்றாவது தெருவில் வசித்து வரும் தம்பதியினர் சத்தியநாதன் - எழிலரசி. இவர்களுக்கு ராஜேஷ் (வயது 28), பிரபாகரன் (வயது 27) என இரண்டு மகன்கள் இருந்தனர். எழிலரசி அதே பகுதியில் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
அப்பகுதியில் பிரபல ரவுடியாக விளங்கிய ராஜேஷ்,மூன்று வருடங்களுக்கு முன்பு ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மூன்று வருடங்களாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று இரவு எழிலரசியின் இரண்டாவது மகனான பிரபாகரன், பழவந்தாங்கலில் வழக்கமாக மது அருந்தும் இடத்திற்கு மது அருந்துவதற்காக சென்றுள்ளார். தொடர்ந்து, இரவு முழுவதும் பிரபாகரன் வீட்டிற்கு வராததால் அவரின் தாய் பதட்டமைடைந்து அக்கம்பக்கத்தில் தேடியுள்ளார்.
தொடர்ந்து, இன்று (ஆக. 13) காலை அப்பகுதியில் உள்ள குப்பைக் கொட்டும் இடத்தில், பிரபாகரனின் வெட்டப்பட்ட உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பழவந்தாங்கல் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தத் தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் என்ன, அவரை கொலை செய்தது யார் என்றும் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில் பிரபாகரனின் நண்பரான மூவரசம்பேட்டையைச் சேர்ந்த ராபின் ராஜா என்பவர் தான் கொலை செய்தவர் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து, அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டபோது பார்த்திபன், ராஜ்குமார், அருண், பிரபு, ஆகாஷ், ராஜன் ஆகியோர் சேர்ந்து பிரபாகரனை கொலை செய்தது தெரிய வந்தது.
அப்பகுதி இளைஞர்களிடம் பிரபாகரன் தான் ஒரு ரவுடி என்றும், ஏற்கனவே கொலை வழக்குகள் உள்ளது என்றும் மிரட்டி வந்துள்ளார். இதனால் கோபமடைந்த ஒரு சில இளைஞர்கள் பிரபாகரனை ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு இருந்துள்ளனர்.
இதனிடையே ராபின் ராஜா, தனது உறவினர் பெண்ணுடன் பிரபாகரன் காதலில் இருந்தது அறிந்து ஏற்கனவே கோபத்தில் இருந்த நிலையில், அவருடன் கைகோர்த்து இளைஞர்கள் பிரபாகரனை கொலை செய்தது தெரிய வந்தது. தொடர்ந்து இவர்கள் ஏழு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க:சிபிஐ அலுவலர்கள் போல் நடித்து நகைகள் கொள்ளை: காவல் துறையினரின் தேடுதல் வேட்டையில் 6 பேர் சிக்கினர்!