சென்னை: ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை குறித்து தமிழ்நாடு காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின்படி, கஞ்சா வேட்டை 4.0 அதிரடி நடவடிக்கை மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் கஞ்சா போதைப் பொருளை முற்றிலுமாக ஒழிக்க கடந்த இரண்டு ஆண்டுகளில் கஞ்சா வேட்டை 1.0, 2.0, 3.0 நடந்து முடிந்தன.
அடுத்தகட்டமாக, கஞ்சா வேட்டை 4.0 அதிரடி நடவடிக்கை கடந்த 1ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த ஆறு நாட்களில் தமிழ்நாடு முழுவதும் 659 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 5 பேர் பெண்கள். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 728 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தாம்பரத்தில் 15 டன் குட்கா மற்றும் 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் தொடர்பாக 41 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.