சென்னை: 1960ஆம் ஆண்டு இயக்குநர் ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளியானது களத்தூர் கண்ணம்மா திரைப்படம். இப்படத்தில் ஜெமினி கணேசன், சாவித்திரி, டி.எஸ்.பாலையா, மனோரமா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் தயாரித்திருந்தது. அதே படத்தில் 5வயது சிறுவனாக ஒரு பையன் அறிமுகமாகிறான்.
தமிழ் சினிமாவின் பொற்காலமாக திகழ்ந்த அந்த காலகட்டத்தில் வெளியான இப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. இப்போது வரையிலும் சிறந்த படமாக விளங்குகிறது. தனது மழலை மாறாத குரலில் ’அம்மாவும் நீயே அப்பாவும் நீயே’ என்று பாட்டுப் பாடி படம் பார்த்தவர் எல்லோரது மனதிலும் குடிபுகுந்தான் அந்த பையன். அதுமட்டுமின்றி தனது சிறப்பான நடிப்பால் முதல் படத்திலேயே ஜனாதிபதி விருது பெற்றார். அந்த பையன் தான் இன்று உலக சினிமாவே உயர்ந்து பார்க்கும் உலக நாயகன் கமல்ஹாசன். இன்றுடன் கமல்ஹாசன் திரைத்துறைக்கு வந்து 63ஆண்டுகள் நிறைவடைகிறது. கிட்டத்தட்ட தனது வாழ்நாள் முழுவதையும் தமிழ் சினிமாவுக்காக அர்ப்பணித்த மகா கலைஞன் கமல்ஹாசன்.
களத்தூர் கண்ணம்மாவில் தொடங்கிய அவரது கலை தாகம் தற்போது வரை குறையவில்லை. விக்ரம் அவருக்கு 232வது படம். இதனை தொடர்ந்து இந்தியன் 2, எச்.வினோத், மணிரத்னம் படம் என வரிசை கட்டி நிற்கின்றன படங்கள். இந்த 63 ஆண்டுகளில் 6 மொழிகளில் நடித்துள்ளார். நான்கு முறை தேசிய விருது பெற்றுள்ளார். இந்திய சினிமாவே வியக்கும் வண்ணம் பல படங்களை இயக்கியுள்ளார். பல பரிசோதனை முறைகளையும் மேற்கொண்டு அதில் பல முறை வெற்றி பெற்றுள்ளார். தோல்வியடைந்தாலும் மீண்டும் முயற்சிகளை தொடர்வதை நிறுத்துவதில்லை. சம்பாதித்த மொத்த பணத்தையும் சினிமாவிலேயே முதலீடு செய்து வருபவர்.
இதையும் படிங்க:Jailer Review: ரசிகர்களுடன் படம் பார்த்த படக்குழுவினரின் ரியாக்ஷன்ஸ்!
தமிழ் சினிமாவிற்கு கமல்ஹாசன் பெற்றுத்தந்த மகுடங்கள் ஏராளம். இவரது கனவுப் படமான மருதநாயகம் மட்டும் வெளியாகி இருந்தால் தமிழ் சினிமா என்றால் என்ன என்பதை இந்த உலகம் கண்டு வியந்திருக்கும். இன்னும் தாமதமாகிவிடவில்லை. எப்போது வேண்டுமானாலும் அது உயிர் பெறும். அந்த நம்பிக்கை கமலுக்கும் அவரது ரசிகர்களுக்கும் உண்டு.
தமிழ் சினிமாவில் பல சாதனைகளை படைத்தவர் கமல்ஹாசன். பக்கம் பக்கமாக பேசி வந்த தமிழ் சினிமாவில் பேசாமலேயே பேசும் படம் என்ற ஒன்றை எடுத்து வியக்க வைத்தார். ஹாலிவுட்டில் பிறக்க வேண்டிய உன்னை தமிழ் மண் பெற்றெடுத்து எங்கள் பாக்கியம் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நாயகன், மூன்றாம் பிறை, தேவர் மகன், இந்தியன் என நான்கு முறை தேசிய விருது பெற்றுள்ளார்.