சென்னை:மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''ஐஐடி உள்ளிட்ட மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் தொடர்ந்து மாணவர் தற்கொலைகள் நிகழ்வதும், பட்டியல் சாதி பழங்குடியின மாணவர்கள் உயிர் பறி போவதும் பற்றி நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ஒன்றிய கல்வி இணை அமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்க்கார் பதில் அளித்துள்ளார்.
அண்மையில் மும்பை ஐஐடி உள்ளிட்ட மத்திய கல்வி நிறுவனங்களில் நிகழும் தற்கொலைகளைத் தடுக்க நடவடிக்கைகள், மத்திய கல்வி நிறுவன வாரியாக எஸ்.சி, எஸ்.டி செல்கள் அமைக்கப்பட்ட விவரங்கள், ஐஐடி மும்பை மாணவர் நல மையத்தின் தலைமை ஆலோசகரே இட ஒதுக்கீடுக்கு எதிராக பகிரங்கமாக பேசினாரா, இப்படிப்பட்டவர்கள் இது போன்ற குழுக்களில் இருந்தால் எப்படி பட்டியல் சாதி, பழங்குடியின மாணவர்களுக்கு நம்பிக்கை ஏற்படும்? பொருத்தமான நபர்களை இது போன்ற குழுக்களில் நியமிக்க என்ன ஏற்பாடுகள்? இது போன்ற குழுக்களில் பட்டியல் சாதி பழங்குடியின பிரதிநிதித்துவம் இருப்பதற்கு வழி காட்டல்கள் ஏதேனும் உண்டா? என்று கேள்விகள் கேட்டிருந்தேன்.
அதற்கு கல்வி இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் அளித்துள்ள பதிலில், 108 மத்திய கல்வி நிறுவனங்களில் 87ல் எஸ்.சி, எஸ்.டி செல்கள் உள்ளன. மற்ற நிறுவனங்களில் சம வாய்ப்பு செல், மாணவர் குறை தீர் செல், மாணவர் குறை தீர் குழு, மாணவர் சமூக மன்றம், குறை தீர் அலுவலர் ஆகிய ஏற்பாடுகள் உள்ளன. கடந்த ஐந்தாண்டுகளில் ஐஐடிக்களில் 33, என்ஐடிக்களில் 24, ஐஐஎம்களில் 4 என மொத்தம் 61 மாணவர் தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன என கூறியிருக்கிறார்.
தேசிய கல்விக் கொள்கை -2020 எப்படி மாணவர் ஆலோசனை, உணர்வு சமனிலை, விளையாட்டு, கலாசாரம், சமூக சேவை, சூழலியல் ஆகியன மூலம் மாணவர்களின் உளவலிமையை மேம்படுத்த வழி சொல்லியுள்ளது என்றும் விவரித்துள்ளார். மும்பை ஐஐடியில் இறந்த மாணவர் குடும்பத்திற்கு உரிய ஆதரவை அந்நிறுவனம் தந்து வருவதாகவும், உள் விசாரணை நடைபெற்று வருவதோடு, மகாராஷ்டிரா அரசு அமைத்துள்ள சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு ஒத்துழைப்பு நல்கி வருவதாகவும், இட ஒதுக்கீட்டுக்கு எதிராக கருத்துகளை வெளியிட்ட மாணவர் நல மைய தலைமை ஆலோசகர் நீக்கப்பட்டு பட்டியல் சாதி, பழங்குடி பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.