தமிழ்நாடு

tamil nadu

சென்னை சைபர் கிரைம் பிரிவில் 602 வழக்குகள் பதிவு - பொதுமக்களுக்கு காவல் துறை எச்சரிக்கை!

சைபர் கிரைம் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து இதுவரை 602 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை சைபர் கிரைம் பிரிவு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

By

Published : Sep 20, 2020, 2:13 AM IST

Published : Sep 20, 2020, 2:13 AM IST

சைபர் கிரைம் பிரிவில் 602 வழக்குகள் பதிவு
சைபர் கிரைம் பிரிவில் 602 வழக்குகள் பதிவு

சென்னை: கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட 12 சைபர் கிரைம் பிரிவு காவல் துறையினர் மூலம் பொதுமக்களிடமிருந்து இதுவரை 602 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, பொதுமக்கள் இழந்த 23 லட்சம் ரூபாய் பணத்தையும் மீட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அதிகளவிலான சைபர் குற்றங்கள் நடைபெறுவதால், பாதிக்கப்பட்டவர்கள் தொலைதூரத்திலிருந்து காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்து புகார் அளிக்க தாமதமாக உள்ளது என பொதுமக்கள் புகார் அளித்தனர்.

குறிப்பாக, சைபர் மோசடியில் இழந்த பணத்தை 24 மணி நேரத்திற்குள் பொதுமக்கள், சைபர் கிரைம் காவல் துறையினரிடம் புகார் அளித்தால் விரைவில் மீட்டுத் தருவதற்கு வாய்ப்புள்ளது. இதனால், பொதுமக்களுக்காக காவல் மாவட்ட துணை ஆணையர் அலுவலகத்தில் சைபர் கிரைம் கூடத்தை அறிமுகப்படுத்தினர்.

இதன் மூலம், பொதுமக்களுக்கு சைபர் மோசடியில் இழந்த பணத்தை உடனடியாக அந்த வங்கியிடம் பேசி, அந்த பணத்தை குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு செல்லாமல் தடுக்கப்பட்டு, இழந்த பணத்தை மீட்டுக் கொடுத்து மோசடியை தடுத்து நிறுத்தியும் வருகின்றனர்.

இதுவரையில், சைபர் கிரைம் பிரிவு காவல் நிலையங்களில் ஆன்லைன் மோசடி, ஓடிபி மோசடி, வேலைவாய்ப்பு மோசடி, பெண்களை துன்புறுத்துவது, ஆபாச பதிவுகள் போன்ற சைபர் குற்றங்கள் தொடர்பாக வடக்கு மண்டலத்தில் 57 வழக்குகளும், தெற்கு மண்டலத்தில் 292 வழக்குகளும், கிழக்கு மண்டலத்தில் 115 வழக்குகள், மேற்கில் 138 வழக்குகள் என மொத்தம் 602 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்குகளில் இதுவரை 57 வழக்குகள் முடிக்கப்பட்டு, பொதுமக்கள் இழந்த தொகையான 22 லட்சத்து 81 ஆயிரத்து 632 ரூபாயை மீட்டுக் கொடுத்துள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் தங்களது ஏடிஎம் கார்டு பற்றிய தகவல்களை யாரிடமும் பகிர வேண்டாம் எனவும், பணத்தை இழந்துவிட்டால் உடனடியாக சைபர் கிரைம் பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் படியும் சைபர் கிரைம் பிரிவு காவல் துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: 2 மாதத்தில் 200 பேர் மீது மணல் கடத்தல் வழக்கு: காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன்

ABOUT THE AUTHOR

...view details