சென்னை: தமிழ்நாடு பத்திரப்பதிவு துறையில் கடந்த 6 ஆண்டுகளாக, 2016 முதல் 2022 ஆம் ஆண்டு வரை நடந்து வரும் மிகப்பெரிய பத்திரப்பதிவு மோசடி மற்றும் ஊழல் நடந்துள்ளதாக ஆதாரத்துடன் அறப்போர் இயக்கம் சார்பில் சிபிஐ மற்றும் லஞ்ச ஒழிப்பு துறைக்கு கொடுத்துள்ளது என சென்னை நுங்கம்பாக்கத்தில் அறப்போர் இயக்கத்தின் அலுவலகத்தில் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இது குறித்து பேசிய அவர், உச்ச நீதிமன்றம் குழு தடை போட்ட 5,300 ஏக்கர் PACL நிலங்களை மோசடி செய்து, இந்த நிலங்களை சட்டவிரோதமாக விற்ற தமிழ்நாடு பத்திரப்பதிவு துறை அதிகாரிகள். இவர்கள் குறித்து ஆதாரங்களுடன் அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் சிபிஐயில் புகார் கொடுத்துள்ளது. பத்திரப்பதிவு துறை கூடுதல் ஐஜி கே.வி. சீனிவாசன் உள்பட இதில் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
மேலும் கடந்த அதிமுக ஆட்சியில் பத்திரப்பதிவு துறை அமைச்சராக இருந்த கே.சி.வீரமணி, தற்போதைய அமைச்சராக உள்ள மூர்த்தி, இத்துறையின் அரசு செயலாளர் ஜோதி நிர்மலாசாமி உள்ளிட்ட அரசு உயர் பதிவில் இருக்கும் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார். மேலும் இந்த விவகாரம் குறித்து ஏன் இதுவரை அமைச்சர் மூர்த்தி மற்றும் துறையின் செயலாளர் ஜோதி நிர்மலாசாமி எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது ஏன் எனவும் கேள்வி எழுப்பி உள்ளார். எனவே இவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கையை முதலமைச்சர் ஸ்டாலின் எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.