சென்னை வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை வழியாக தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் வாகனங்களில் கடத்தப்படுவதாக காவல் துறையிருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, குன்றத்தூர் காவல் துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாகக் கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று அவ்வழியாக இருசக்கர வகனத்தில் வந்த ஒருவரை காவல் துறையினர் சோதனை செய்தனர். அவரது வாகனத்தில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த அலிபாபா (52) என்பதும் கூடுவாஞ்சேரி அடுத்த ஊரப்பாக்கத்தில் உள்ள குடோனில் அதிக அளவில் குட்கா பதுக்கி வைத்து சப்ளை செய்து வந்ததும் தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து காவல் துறையினர் குடோனை சோதனை செய்தபோது சுமார் ஆறு டன் எடை கொண்ட குட்கா மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து குடோனிலிருந்த சரவணனை (34) காவல் துறையினர் கைது செய்தனர்.
சுமார் ரூ.20 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருள்களை பறிமுதல் செய்த காவல் துறையினர் இதற்கு மூளையாகச் செயல்பட்டுவந்த முருகன் என்பவரை தீவிரமாகத் தேடிவருகின்றனர்.