சென்னை:சைதாப்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மடுவின்கரை, பாரதி தெருவில் ரூ.30 லட்சம் செலவில் நவீன உபகரணங்களுடன் கூடிய உடற்பயிற்சிக்கூடத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (அக்.20) திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பொதுமக்கள் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
பொதுவெளியில் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். இங்கிலாந்தில் நேற்று 40 ஆயிரம் என்கிற அளவில் தொற்று பாதிப்பு உயர்ந்துள்ளது. சிங்கப்பூரில் பாதிப்பு குறைந்து, தற்போது அதிகரித்து வருகிறது. உலக நாடுகள் எல்லாம் அச்சப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
25% பேர் - 2 டோஸ் தடுப்பூசி
தமிழ்நாட்டில் இதுவரை முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 68 விழுக்காடாக இருக்கின்றனர். இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 25 விழுக்காடாக உள்ளது. இந்த எண்ணிக்கை கவலையளிக்கிறது. 57 லட்சம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.