சென்னை:மேற்குத் தாம்பரம், ரங்கநாதபுரம் இரண்டாவது குறுக்கு தெருவைச் சேர்ந்த பாக்கியலட்சுமி என்பவர், நேற்று (ஜனவரி 09) இரவு அவரது மகன் யுவராஜ் மற்றும் சூர்யா ஆகியோருடன் வீட்டின் வெளியே நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்து உள்ளார்.
அப்போது அங்கு மூன்று இரு சக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று, பாக்கியலட்சுமியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி அவர் கையில் வைத்திருந்த விலை உயர்ந்த செல்போனையும் பிடுங்கி உள்ளனர். மேலும், அங்குள்ள பொது மக்களைப் பார்த்து, நாங்கள் பெருங்களத்தூரைச் சேர்ந்த ரவுடிகள், எங்களுக்கு நீங்கள் மாமூல் கொடுக்க வேண்டும் என மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று உள்ளனர்.
இது குறித்து, பாக்கியலட்சுமி தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீசார். தாம்பரம் காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைத்து சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர்.
இதனையடுத்து, குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட, ஹேமச்சந்திரன் (எ) சந்துரு, சரண்குமார், புவனேஷ், ஆனந்த் (எ) அகில், விக்கி, கோகுல் ஆகிய 6 பேரையும் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அவர்களிடமிருந்து 3 பட்டாக்கத்திகள் செல்போன் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இதையும் படிங்க:ரியல் எஸ்டேட் அதிபர் கட்டையால் அடித்து கொலை: அரசு மதுபான கடையில் பரபரப்பு! நடந்தது என்ன?