சென்னை: தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலமாக குவைத், சவூதி அரேபியா, ஓமன், பின்லாந்து, கனடா, ஆஸ்திரேலியா உள்படப் பல நாடுகளுக்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை வேலைக்காக அனுப்பப்பட்டு உள்ளனர். தற்போது சவூதி அரேபியாவில் செவிலியர்களாக பணியாற்ற 6 பேர் செல்கின்றனர். சவூதி அரேபியா செல்லும் 6 செவிலியர்களை, தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழியனுப்பி வைத்தார்.
இதற்கு முன்னதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழ்நாடு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கத் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு நிறுவனம் மூலம் பல்வேறு நாடுகளில் வேலை வாய்ப்பை உருவாக்கித் தரப்படுகிறது.
சவூதி அரேபியாவில் செவிலியர் வேலைக்காக அனுப்பப்படுபவர்கள் தமிழ்நாடு அரசின் முழு செலவில் வேலைக்காக அனுப்பிவைக்கப்படுகின்றனர். தற்போது சென்னை, திருநெல்வேலி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலிருந்து வேலைக்குச் செல்கின்றனர். இதுவரை 800க்கும் மேற்பட்டவர்களை வெளிநாட்டு வேலைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
அடுத்தகட்டமாக பின்லாந்து நாட்டுடன் 500 செவிலியர்கள் பணி வாய்ப்பிற்காக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வேலைக்காக அனுப்பப்படுவார்கள்" என்று அவர் கூறினார்.