சென்னை: கே.கே. நகர் அம்பேத்கர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர், தமிழ் முதல்வன் (எ) ரமேஷ் (40). பிரபல ஏ கேட்டகிரி ரவுடியான இவர் விசிக-வின் விருகம்பாக்கம் தொகுதி அமைப்பாளராக இருந்து வந்தார். மேலும், இவர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார்.
இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஏ கேட்டகிரி ரவுடியான ரமேஷ் மீது, கோடம்பாக்கம், எம்கேபி நகர், எம்ஜிஆர் நகர், கேகே நகர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில் இன்று காலை நேரத்தில் ரவுடி ரமேஷ் கே.கே. நகர் பாரதிதாசன் சாலையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே உள்ள பெட்டிக்கடையில் டீ அருந்த சென்றுள்ளார். பின்னர் அங்கு நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது திடீரென காரில் முகமூடி அணிந்து வந்த கும்பல் ஒன்று ரவுடி ரமேஷை பெட்டிக்கடை வாசலில் வைத்து ஓட ஓட வெட்டி கொலை செய்து விட்டு காரில் தப்பிச் சென்றது.
இதில், ரவுடி ரமேஷ் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தினர், உயிரிழந்த ரவுடி ரமேஷின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இந்த கொலை சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். முதற்கட்டமாக சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தப்பி ஓடிய முகமூடி கொலையாளிகளை தேடிவந்தனர்.