சென்னை: இன்று (ஜூன் 16) பொது சுகாதாரத் துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலின் அடிப்படையில், “தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 15,233 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.
இதன் மூலம் தமிழ்நாட்டிலிருந்து 549 நபர்களுக்கும், சிங்கப்பூர், அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்தும், மேற்கு வங்கம் மாநிலத்தில் இருந்தும் வந்த தலா ஒரு நபர் என மொத்தம் 552 பேருக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 56 லட்சத்து 60 ஆயிரத்து 872 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.
இதனால் 34 லட்சத்து 58 ஆயிரத்து 997 பேர் ஒரு வகை வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது தெரியவந்தது. இவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 2,313 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்தவர்களில் 177 பேர் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக சென்னையில் 253, செங்கல்பட்டில் 129, கோயம்புத்தூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தலா 32, திருவள்ளூர் மாவட்டத்தில் 30, கன்னியாகுமரி மாவட்டத்தில் 14, திருநெல்வேலி மாவட்டத்தில் 8, நீலகிரி மாவட்டத்தில் 6, ராணிப்பேட்டை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் தலா 5 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் கிருஷ்ணகிரி, மதுரை, சேலம் ஆகிய மாவட்டங்களில் தலா 4, ஈரோடு, சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தலா 3, திருச்சி, வேலூர், தென்காசி, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் தலா 2, அரியலூர், கரூர், நாமக்கல், பெரம்பலூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு நபர் என மொத்தம் 552 நபர்களுக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
நோய் தொற்று பரவும் விதம் தொடர்ந்து அதிகரித்து, 3.3 சதவீதம் மீண்டும் உயரத் தொடங்கி உள்ளது. இது சென்னையில் 8.1 சதவீதமாகவும், செங்கல்பட்டில் அதிகபட்சமாக 9.8 சதவீதம் ஆகவும் பரவத் தொடங்கியுள்ளது. அதேபோல் நீலகிரி மாவட்டத்தில் 252 நபர்களுக்கு பரிசோதனை செய்ததில் 23 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்து பாதிப்பு சதவிகிதம் 9.1 என பதிவாகியுள்ளது” எனத் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க:சென்னையில் அதிகரிக்கும் கரோனா: கட்டுப்படுத்துவதில் மாநகராட்சி தீவிரம்