சென்னை:அத்தியாவசியப் பொருட்கள் கடத்தியதாக கடந்த 6 மாதங்களில் 764 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக 525 நபர்களை கைது செய்துள்ளதாகவும் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை இன்று (ஜூலை 10) தெரிவித்துள்ளது. மேலும், கடத்தப்பட்ட 444 டன் ரேசன் அரிசி மூட்டைகள், 75 லிட்டர் மண்ணெண்ணெய் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழ்நாட்டில் சென்னை வடக்கு, சென்னை மேற்கு, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களைத் தடுக்கும் பொருட்டு சென்னை மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ரேசன் அரிசிக் கடத்தலைத் தடுக்க குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரேசன் பொருட்கள் கடத்தல்; 525 பேர்கள் கைது:அந்த வகையில், இதுகுறித்து குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜுன் மாதம் வரை சென்னை மண்டலத்தில் மட்டும் அத்தியாவசியப் பொருட்களை கடத்தியதாக மொத்தம் 764 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 525 நபர்களை குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்டவர்கள் கள்ளத்தனமாக பதுக்கி வைத்திருந்த ரேசன் அரிசி சுமார் 444 டன் பறிமுதல் செய்யப்பட்டு, பொது விநியோக திட்ட மண்ணெண்ணெய் சுமார் 75 லிட்டர், கலப்பட ஆயில் சுமார் 2,40,700 லிட்டர் மற்றும் சிலிண்டர்களை வணிக நிறுவனங்களில் பயன்படுத்தியதாக 445 சிலிண்டர்கள் பறிமுதல்' செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.