சென்னை:18 வயதிற்கு உள்பட்ட மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறன் மாணவர்கள் பள்ளியில் இடையில் நின்றிருந்தால் அவர்களைக் கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனத் தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
மேலும் 18 வயதிற்கு உள்பட்ட மாணவர்களைப் பள்ளியில் சேர்ப்பதற்கு வீடு வாரியாக ஆய்வு செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், திருமணமாகி பள்ளிக்கு வராமல் இடையில் நின்ற மாணவிகளைக் கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்து பள்ளிக்கல்வித்துறை சிறப்பான பணியைச் செய்து உள்ளது. 13 வயதேயான எட்டாம் வகுப்பு மாணவிக்கும் பெற்றோர் திருமணம் செய்து வைத்த அவலமும் இதில் அரங்கேறியுள்ளது.
உலகையே உலுக்கி எடுத்த கரோனா வைரஸ் தொற்று தமிழ்நாட்டில் 2020 மார்ச் மாதம் தனது பாதிப்புகளை காட்டத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து பொதுமக்களை நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில் அரசால் பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன.
இதில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடக்கப்பட்டு நோய்த்தொற்று தாக்கத்திலிருந்து பாதுகாப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. இதனால் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊரிலேயே சென்று தங்கும் சூழ்நிலை ஏற்பட்டது.
குடும்பத்தினர் அவர்களின் வீடுகளுக்குள் அடைந்துகிடந்த நிலையும் இருந்தது. இதுபோன்ற சூழ்நிலைகள் வீட்டிலிருந்த பெண் குழந்தைகளுக்குப் பெற்றோர் தங்களின் உறவினர்களைக் கண்டறிந்து திருமணம் செய்து வைக்கும் அவலநிலையும் அரங்கேறியுள்ளது.
தமிழ் நாட்டில் குழந்தை திருமணத்தைத் தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் பள்ளி மாணவிகளுக்கும் கரோனா காலத்தில் திருமணம் செய்யப் பட்டு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. பள்ளியில் இடை நின்ற மாணவர்களைக் கண்டறிந்து மீண்டும் சேர்ப்பதற்காக ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் மூலம் பள்ளி கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டது.