சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள புதிய தமிழகம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு பட்ஜெட் குறித்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "தமிழ்நாடு 2023-24ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை நேற்று சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் முடிந்தது. சட்டமன்றத்தேர்தலின்போது நிதி சார்ந்த பல்வேறு வாக்குறுதிகளை இந்த அரசு அறிவித்திருந்தது.
அதில் ஒன்று 2.50 கோடி குடும்பப் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் என்ற அறிவிப்பு, மேலும் 55 அரசுத் துறை பணியாற்றிய 18 லட்சம் நபர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம், அதே போல் போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத்திட்டம் போன்ற பல்வேறு பொருளாதாரம் சார்ந்த அறிவிப்புகள் அறிவித்தார்கள்.
தற்போது எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பெண்களுக்கான உரிமைத்தொகை குறித்து கேள்வி எழுப்பியதால், குடும்ப பெண்களுக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்படும் என தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்கள். பெண்களுக்காக அறிவிக்கப்பட்ட திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள 7000 கோடி ரூபாய் நிதியை 1000 ரூபாயாகப் பிரித்தால் 58 லட்சம் குடும்பப் பெண்களுக்கு, அதாவது ஐந்தில் ஒரு பகுதி பெண்களுக்கு மட்டுமே இந்தத் திட்டம் சென்றடையும்.
இதிலிருந்து பார்த்தால் அவர்கள் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றத் தவறிவிட்டார்கள் என்று தான் அர்த்தம். கொடுத்த வாக்குறுதிகளை ஆட்சி முடியும் தருவாயில் நிறைவேற்றினாலோ அல்லது நிறைவேற்றத் தவறினாலோ ரம்மி, சீட்டு மோசடி போல அதுவும் ஒரு மோசடியாக கருதப்படும். எனவே, திமுக அரசு கொடுத்த வாக்குறுதியின் படி 2.50 கோடி குடும்பப் பெண்களுக்கு இத்திட்டம் சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.