சென்னை:தமிழ்நாடு உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் சைபர் கிரைம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நவீன தொழில்நுட்பங்களை முறைகேடாகப் பயன்படுத்தி, அதன் மூலம் பொதுமக்களின் ரகசிய தகவல்களைத் திருடும் ஆசாமிகள், மோசடிகளை அரங்கேற்றுகின்றனர். இதனால் கோடிக்கணக்கான பணத்தை இழந்தவர்கள் ஏராளம். இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க சைபர் கிரைம் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் ஒரு நபரின் புகைப்படத்தை வைத்து பல சிம் கார்டுகள் பயன்படுத்தப்பட்டு வருவது தெரியவந்துள்ளது. ஒரே நபரின் புகைப்படத்தை வைத்து 5,000 சிம் கார்டுகள் வாங்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஒரே நபரின் பெயரில், 10 செல்போன்கள் பயன்படுத்தப்பட்டு வருவதும் சைபர் கிரைம் போலீசாரின் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
இதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள போலீசார், சிம் கார்டுகளை விற்பனை செய்துள்ள சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் பயன்பாட்டாளர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளனர். சைபர் கிரைம் குற்றங்களில் ஈடுபட்டதாக தமிழ்நாட்டில் 20,192 செல்போன் எண்களை முடக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதில் கடந்த ஒரு வாரத்தில் 9,500 செல்போன் எண்கள் முடக்கப்பட்டுள்ளன. 15 நாட்களில் 19,500 செல்போன்களும் முடக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. நவீன தொழில்நுட்பங்களை முறைகேடாகப் பயன்படுத்தி, மோசடியில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ள சைபர் கிரைம் போலீசார், பொதுமக்கள் தங்களின் அடையாள ஆவணங்கள் குறித்த தகவலை யாரிடமும் பரிமாற வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: பெண் டப்பிங் கலைஞரை அவதூறாகப் பேசியதாக புகார் - நடிகர் ராதா ரவி மீது வழக்கு