சென்னை:பாரிசை சேர்ந்த கிறிஸ்டி என்ற இணையதளத்தில் தமிழ்நாட்டின் 500 ஆண்டுகள் பழமையான நடராஜர் சிலையை ஏலம் விடுவதற்கான விளம்பரம் செய்யப்பட்டது. இந்த விளம்பரம் குறித்து அறிந்த தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் "ஸ்டாப் ஆக்சன்" ஏலத்தை நிறுத்துங்கள். சிலையை எங்களிடம் திரும்ப ஒப்படையுங்கள். இது எங்களுக்கு சொந்தமானது. அதற்கான ஆதாரங்கள் உல்ளன என்று பதிவிட்டுள்ளார்.
பாரிசுக்கு கடத்த முயன்ற 500 ஆண்டுகால பழமையான நடராஜர் சிலை ! இந்தப் பதிவின் அடிப்படையில் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பிரான்ஸ் தூதரகம் மூலமாக கிறிஸ்டி விற்பனை அருங்காட்சியகத்தை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலர்கள் அனுகியுள்ளனர். இந்த சிலைக்கு 2 லட்சம் முதல் 3 லட்சம் யூரோ விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1.76 முதல் ரூ,2.64 கோடியாகும்.
இந்த துரித நடவடிக்கையால் ஏலம் நிறுத்தப்பட்டதாக பிரான்சில் உள்ள இந்திய தூதர் ஜாவித் அஷ்ரப், தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளியிடம் தெரிவித்துள்ளார். பொதுவாக சிலைகள் கடத்தப்படும் பொழுது கடத்தல் காரர்களை கண்டுபிடித்து சிலைகள் இருக்கும் இடத்தை அறிந்து மீட்டு வருவது நீண்ட காலம் எடுக்கும். கடத்தப்பட்ட சிலைகள் வெளிநாட்டு அருங்காட்சியத்தில் இருக்கும் பட்சத்தில் யுனெஸ்கோ ஒப்பந்த விதிப்படி திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடராஜர் சிலை 50 ஆண்டுகளுக்கு முன்பு 1972ஆம் ஆண்டு திருநெல்வேலி, கோவில்பட்டி கோதண்டராமேஸ்வர கோயிலில் இருந்து திருடப்பட்டது. இதை இந்து அறநிலையத்துறை ஆவணத்தின் அடிப்படையிலும் , பிரெஞ்சு இன்ஸ்டியூட் ஆப் புதுச்சேரியில் உள்ள புகைப்படத்தின் அடிப்படையாக வைத்தும் தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இந்த சிலை விற்பனை செய்யப்பட இருந்த நிலையில் அதை தடுத்த தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி மற்றும் மத்திய - மாநில அரசு அதிகாரிகளுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமூக வலைதளம் மூலம் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: குமரி பெண்ணிடம் உத்தரப்பிரதேச சைபர் கும்பல் கைவரிசை - இருவர் கைது