சென்னை: தமிழ்நாட்டில் நாளை (ஜூன் 22) முதல் 500 டாஸ்மாக் சில்லறை மதுபான கடைகள் மூடப்பட உள்ள நிலையில், இது குறித்து டாஸ்மாக் நிர்வாகம் அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சென்னை மண்டலத்தில் 138 கடைகள் மூடப்பட உள்ளன. இதில் சென்னை வடக்கு பகுதியில் மொத்தம் உள்ள 100 கடைகளில் உள்ள 20 கடைகளும், சென்னை மத்திய பகுதியில் மொத்தம் உள்ள 93 கடைகளில் 20 கடைகளும், தென் சென்னை பகுதியில் மொத்தம் உள்ள 102 கடைகளில் உள்ள 21 கடைகளும் மூடப்பட உள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போக காஞ்சிபுரம் வடக்கு பகுதியில் 15 கடைகளும் மற்றும் தென் பகுதியில் 16 கடைகளும் மூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் திருவள்ளூர் கிழக்கு பகுதியில் 32 கடைகளும், மேற்கு பகுதியில் 14 கடைகளும் மொத்தம் சென்னை மண்டலத்தில் 138 கடைகள் மூடப்படவுள்ளன. இதனை தவிர மதுரை மண்டலத்தில் 125 கடைகளும், திருச்சி மண்டலத்தில் 100 கடைகளும் என தெரிவித்த டாஸ்மாக் நிர்வாகம் கோயம்புத்தூர் மண்டலத்தில் 78 கடைகளும், சேலம் மண்டலத்தில் 59 கடைகளும் மூடப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் 500 மதுக் கடைகள் மூடப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்து இரு மாதங்களுக்கு மேலாகியும் அந்த அறிவிப்பு செயல்படுத்தப்படாமல் இருந்து வந்தது. சட்டப்பேரவையில் அறிவித்தவாறு மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தேன். அதன் பயனாக நாளை முதல் 500 மதுக்கடைகள் மூடப்படவிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என தெரிவித்துள்ளார்.