தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறை சார்பில் கரோனா வைரஸ் தடுப்புப் பணிகளுக்காக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கிருமிநாசினி தெளித்திட 50 துரித செயல் வாகனங்களின் சேவைகளைத் தொடங்கிவைக்கும் அடையாளமாக ஏழு வாகனங்களைக் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
இவ்வாகனங்களில் கிருமிநாசினி தெளித்திட தண்ணீரைப் பனித் திவலையாக மாற்றி பீய்ச்சியடிக்கும் தொழில்நுட்பம் கொண்ட கருவிகள், பேரிடர்கால மீட்புப் பணிக்காக 8 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரப்பர் இயந்திர படகுகள் ஆகியவை பொருத்தப்படவுள்ளன. கரோனா வைரஸ் தடுப்புப் பணிகள் முடிவடைந்த பிறகு, இவ்வாகனங்கள் சென்னையின் குறுகிய சாலைகளில் அமைந்துள்ள வீடுகள் மற்றும் இதர கட்டடங்களில் ஏற்படும் தீயினைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.