சென்னை விமானநிலையத்தில், 74-வது குடியரசு தின விழாவையொட்டி(74th Republic Day Celebration), கூடுதல் பாதுகாப்பாக 5 அடுக்கு பாதுகாப்பு முறை இன்று (ஜன.20) முதல் வரும் 30ஆம் தேதி நள்ளிரவு வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் 74-வது குடியரசு தின விழா வரும் 26ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது.
இந்த குடியரசு தின விழா கொண்டாட்டங்களை சீா்குலைக்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக ஒன்றிய உளவுத்துறைக்கு (Central intelligence agency India) தகவல் கிடைத்துள்ளன. இதையடுத்து ஒன்றிய உள்துறை அமைச்சகம் நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரித்துள்ளது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள், வழிபாட்டுத் தளங்கள் என மக்கள் அதிகமாகக் கூடும் முக்கியமான ரயில், பேருந்து நிலையங்கள் போன்ற பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து சென்னை விமானநிலையத்திலும் பாதுகாப்பு ஏற்பாடு அதிகரிக்கப்பட்டு 5 அடுக்கு பாதுகாப்பு (5 layer security at Chennai Airport) அமல்படுத்தப்பட்டுள்ளது. சென்னை விமானநிலையத்திற்கு வரும் வாகனங்களை பிரதான நுழைவு கேட் பகுதியிலேயே நிறுத்தி, சந்தேகப்படும் வாகனங்களை பாதுகாப்பு படையினா் மோப்ப நாய் உதவியுடன் சோதனையிட்டு வருகின்றனா்.
அதைப்போல், வெடிகுண்டு நிபுணா்கள், மெட்டல் டிடெக்டா்கள் மூலம் பரிசோதிக்கின்றனா். விமானநிலைய வளகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசாா் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். விமானநிலைய காா் பாா்க்கிங் பகுதியில் நீண்ட நேரமாக நிற்கும் காா்களை வெடிகுண்டு நிபுணா்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதைபோல், மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் (Central Industrial Security Force) அதிரடி வீரர்கள் மோப்ப நாய்களுடன் சென்னை விமான நிலையத்தின் அனைத்து பகுதிகளுக்கும் குறிப்பாக, விமானங்கள் நிற்கும் பகுதிகளிலும் தீவிரமாக சோதனையிட்டு கண்காணித்து வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் பாா்வையாளா்கள் வருகைக்கான தடை ஏற்கனவே கடந்த 2ஆண்டுகளாக தொடர்ச்சியாக அமலில் இருப்பதால், அதை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனா். அதைப்போல் BCAS பாஸ்கள் வழங்குவதிலும் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.